ஆளுநர்களை பயன்படுத்தி பாஜக போட்டி ஆட்சி...குற்றம்சாட்டும் பாலகிருஷ்ணன்!

ஆளுநர்களை பயன்படுத்தி பாஜக போட்டி ஆட்சி...குற்றம்சாட்டும் பாலகிருஷ்ணன்!
Published on
Updated on
1 min read

ஆளுநர்களை பயன்படுத்தி பாஜக போட்டி ஆட்சி நடத்துவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்ச்சை கருத்துக்களை வெளியிடும் ஆளுநர்:

தமிழகத்தில் சமீப காலமாகவே மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கானது நீடித்து வருகிறது. அதற்கு காரணம், மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்துத்துவா கொள்கையை ஆதரித்தும், இந்திக்கு ஆதரவாகவும் செயல்படும் ஆளுநர் தமிழ்நாட்டின் முக்கிய மசோதாக்களை கிடப்பில் போடுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராகவே ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

கடிதம் வழங்கிய மாநில அரசு:

இதனால் தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை தமிழக அரசு குடியரசு தலைவரிடம் வழங்கியுள்ளது. 

ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது:

இருப்பினும் தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற லோக் ஆயுக்தா நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்ற சர்ச்சை கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போட்டி ஆட்சி நடத்தும் பாஜக:

இந்நிலையில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் 3 நாட்களாக  திருவண்ணாமலையில் நடைபெற்று வந்தது. கூட்டத்தின் இறுதி நாளான நேற்று, செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் ஆளுநர் ரவி அரசியல் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாகவும், மாநில அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை பயன்படுத்தி மாநில அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கிற வகையில் பாஜக ஒரு போட்டி ஆட்சியை நடத்தி வருவதாகவும், இதுபோன்று செயல்படும் ஆளுநர்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், மாநில அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய ஆளுநர், அரசியல் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாகவும், ஆளுநரை வைத்து பாஜக போட்டி ஆட்சியை நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? ஆளுநரை திரும்பபெறுமா? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் வட்டமடித்து வருகின்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com