உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கிய பாஜக கூட்டணி..!

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை களைய முயற்சிக்கும் பாஜக..!

உத்திரபிரதேசத்தில் இஸ்லாமிய வேட்பாளரை களமிறக்கிய பாஜக கூட்டணி..!

உத்திரபிரதேச அரசியலில் ஏற்பட்ட உச்சக்கட்ட குழப்பத்திற்கு மத்தியில், பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் ஒரு முஸ்லீம் நபர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. ஏற்கனவே தலித் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு பாஜகவில் மதிப்பு, மரியாதை கிடையாது எனக் கூறி பல அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தேர்தல் நேரத்தில், பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக்கு தாவிய நிலையில், அப்னா தளத்தின் இந்த நடவடிக்கை கவனிக்கத் தக்கதாக உள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. உத்திரபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என 4 முனை போட்டி நிலவினாலும் கூட, பாஜக, சமாஜ்வாதி கட்சிகளுக்கு தான் நேரடி போட்டி இருக்கிறது. தற்போது அங்கு பாஜகவின் யோகி ஆத்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. ஆகையால் மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி அம்மாநில மக்களை கவர பலமுறை அங்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 

மறுபுறம் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட குறைகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அங்கு பாஜக நிர்வாகிகள் வாய் விடும் போது, அந்த பாயிண்ட்ஸ்களை எடுத்துக் கொண்டு அவர்களை கிடைக்கும் நேரத்தில் கிண்டல் செய்து மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை கவர்ந்து வருகிறார் அகிலேஷ் யாதவ். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக உத்திரபிரதேசம் கருதப்பட்டாலும், அம்மாநில தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் சாதிகள்தான் முக்கிய பங்கை வகித்து வருகின்றன என்பது கசப்பான உண்மையாகும். சமீபத்தில் பாஜகவில் இருந்தும், யோகியின் அமைச்சரவையில் இருந்தும் வெளியேறிய 3 அமைச்சர்களும் ஓபிசி எனப்படும் பிறபடுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான். யோகி ஆட்சியில் ஓபிசி மற்றும் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாக சொல்லி வைத்தாற் போல் மூன்று பேரும் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அகிலேஷ் யாதவ் அந்த மூன்று பேரையும் சமாஜ்வாதிக்கு இழுத்தார். 

இதனால் அதிர்ந்து போன பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், முஸ்லிம் வேட்பாளர்களை முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகளை குறிவைத்தும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை குறிவைத்து புதிய திட்டம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்திருப்பதாகவும், வீடு வீடாகச் சென்று இது குறித்து பிரசாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அப்னா தளம், ராம்பூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஹைதர் அலி கான் என்பவரை சூயர் தொகுதி வேட்பாளராக களமிறக்கியுள்ளது. 36 வயதாக ஹைதர் அலி கான், காங்கிரஸ் முன்னாள் எம்.பி-யான பேகம் நூர் பானுவின் பேரன். பிரிட்டனில் கல்வி பயின்றவர். இவரை கடந்த 13-ம் தேதி சூயர் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்ததை, இவர் ஏற்கவில்லை. காங்கிரஸுக்கு மறுப்பு தெரிவித்த ஹைதர் அலி கான், பிறகு அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் கட்சியில் சேர்ந்தார். சூயர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் ராம்பூர் எம்.பி. ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்னா தளம் அங்கு ஹைதர் அலி கானை வேட்பாளராக அறிவித்துள்ளது. 

2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியில் அறிவிக்கப்படும் முதல் இஸ்லாம் வேட்பாளர் ஹைதர் அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது கூட அப்னா தளம் சார்பில் 11 பேர் களம் கண்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இந்த நிலையில், அப்னா தளத்தில் சேர்ந்ததும் தனது வேலையை ஆரம்பித்து விட்டார் ஹைதர் அலி. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், எதிர்கட்சி மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, "என் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு கொடுத்த பாஜகவுக்கு மிக்க நன்றி... இறைவன் விரும்பினால் நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன்... பாஜகவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. பொதுமக்களை தவறாகவும் வழிநடத்துகிறார்கள்... தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் யார் சரி, யார் தவறு என்பதை புரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். சிறுபான்மையினருக்கு பாஜகவில் மரியாதை இல்லை என்ற குற்றச்சாட்டை களையவும், இந்த தேர்தலில் இஸ்லாமியர்களை வாக்குகளை கவரவும் பாஜக கையில் எடுத்துள்ள தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...