ஒருங்கிணைப்பாளர் பதவி காலி என்பதை ஏற்க முடியாது - ஓ.பி.எஸ்!

ஒருங்கிணைப்பாளர் பதவி காலி என்பதை ஏற்க முடியாது  - ஓ.பி.எஸ்!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுவதற்கு தடைக்கோரி ஓ. பி.எஸ் தொடர்ந்த வழக்கில் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடந்தது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் வலுவடைந்த நிலையில், ஈ. பி.எஸ், ஓ. பி.எஸ் இருவரும் சட்டத்தின்முன் சரிசமமாக மோதி வருகின்றனர். இந்த பின்னணியில் தான், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவைக்கு தடை விதிக்கக் கோரி ஓ பிஎஸ் தரப் பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது,  ஈ பிஎஸ் – ஓ பிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான ஆதாரங்களை அடுக்கினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஈ பிஎஸ் தரப்புக்கு நான்கு கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு பதிலளிக்க வேண்டி வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் தொடங்கிய போது, முதலாக ஈ பிஎஸ் தரப் பில் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது ஓ. பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் பக்கம் உள்ள வாதங்களை முன்வைத்தனர். அதில்,

பொதுக்குழு ஒப்புதல் வழங்காவிட்டால் பதவி காலியாகிவிடுமா:

அதிமுக பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டதாக கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவின் அடிப்படையில் தான் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அப்படி உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி மட்டும் எப்படி காலியாக இருந்ததாக கூற முடியும்? ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகளும் காலியாக உள்ளதாக முன் வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று ஓ. பி.எஸ் தரப் பில் வாதிடப்பட்டது.

தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலியாகும்:

அதிமுகவில் கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் என்பது தேவையில்லை.. ஏனென்றால் திருத்தம் அமலுக்கு வந்து விட்டது, ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறை தான். பதவி காலியாவது என்பது ஒரு கட்சியில் தலைவர்கள் உயிருடன் இல்லாத போது மட்டும் தான் பதவி காலி என்பதை கருதமுடியும். இதுபோன்ற ஒரு சூழல் என்பது அதிமுகவை பொறுத்தவரை 1987 மற்றும் 2016 ல் தான் நிகழ்ந்தது. கட்சி நிறுவனர் எ,.ஜி.ஆர் இறந்த போது என்ன ஆனது என விளக்கவில்லை என்று ஓ. பி.எஸ் தரப் பில் கூறப்பட்டது.

இணையத்தில் வருவதை நோட்டீஸாக எடுத்துக்கொள்ள முடியுமா?:

அதிமுகவின் கட்சி விதியில் திருத்தம் செய்த தீர்மானத்தை பொதுக்குழுவில் வைக்காத நிலையில் பதவிகள் எப்படி காலியாகும்?
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற செயற்குழு தீர்மானத்தின்படி தான் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்படி இருக்க சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும் வழக்கமான பொதுக்குழுவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர்கள் தான் கூட்ட வேண்டும் என்பது  கட்சியின் விதி. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பார்ப்பதை பொதுக்குழு நோட்டீஸ் என எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என்று நீதிமன்றத்தில் ஓ. பி.எஸ் தரப்பு வாதங்களை வழக்கறிஞர் முன்வைத்தார்.