தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்.. பத்திரிக்கை உலகின் புரட்சியாளர்.. சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள்..!

படிப்பு எனும் ஒளிவிளக்கின் மூலம் குடிசை வீட்டையும் மாளிகையாக்கலாம் - சி.பா.ஆதித்தனார்..!

தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்.. பத்திரிக்கை உலகின் புரட்சியாளர்.. சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள்..!

தந்தை பெரியாருடன்:

இன்றைக்கு தந்தைப் பெரியாரை உலக மக்கள் பலரும் புகழ்ந்து கொண்டிருக்க, தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்டவர் ஆதித்தனார். தமிழ்நாடு விடுதலைக்காக நடந்த அறப்போரில் தந்தைப் பெரியாருடன் ஆதித்தனார் சிறை வைக்கப்பட்டிருந்தார். 

பத்திரிக்கை உலகில் புரட்சி:

இருவரும் ஒரே லட்சியத்தை நோக்கி சென்றவர்கள் என்ற ரீதியில் பெரியாருக்கு ஆதித்தனார் மீது தனி பிரியம் உண்டானது. தமிழ் பத்திரிக்கை உலகில் எவரும் சாதிக்க முடியாத பெரும் புரட்சியை தன்னந்தனி ஆளாய் செய்து கொண்டிருக்கிறார் என்று மனதார புகழ்ந்தார். 

மக்களை திரட்டிய மாமனிதர்:

ஆதித்தனார் சிங்கப்பூரில் வாழ்ந்தவர், லண்டனில் மேற்படிப்பு முடித்தவர் என்றபோதும், தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அவரது முழு நோக்கமாய் இருந்தது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர், சாதியால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்று திரட்டினார். 

மொழியால் ஒன்றுபட வேண்டும்:

இனத்தால் பிரிந்து கிடந்தாலும் மொழியால் ஒன்று பட வேண்டும் என்று விரும்பியவர் ’’தமிழ்ப் பேரரசு’’ என்ற இயக்கத்தை உருவாக்கினார். இதையடுத்து 1943-ம் ஆண்டு மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் தமிழ்நாடு இளந்தமிழர் இயக்க மாநாடு என்று நடத்தி தனது தமிழ்ப்பேரரசு இயக்கத்தின் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.  

மக்கள் காவலன்:

மொழிக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்ததைப் போல, தன்னை நம்பி வந்த மக்களை கைகொடுத்துக் காப்பாற்றி, மக்கள் காவலனாகவே திகழ்ந்தார் ஆதித்தனார். தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையாக வசித்தாலும், அவரது வள்ளல் தன்மை ஒரு நாளும் குறைந்ததே இல்லை. 

படிப்பிற்கு ஒளிவிளக்கேற்றியவர்:

ஏழை மக்கள் பலர் அவரைத் தேடி உதவி கேட்டால் சிறிதும் சிந்திக்காமல் உடனே செய்து விடுபவர். அதே போல கல்விக்கான உதவி என்றால் அதை செய்து முடித்து விட்டுதான் அடுத்த வேலையையே தொடங்குவாராம். படிப்பு எனும் ஒளிவிளக்கின் மூலம் குடிசை வீட்டையும் மாளிகையாக்கலாம் எனும் கொள்கையை விடாப்பிடியாக கொண்டிருந்தார். 

அகன்று விட முடியாது:

இப்படி தம் 76-வது வயது வரையிலும் எங்குமே சளைக்காமல், எதிலுமே அச்சம் கொள்ளாமல் நினைத்ததை செய்து முடித்த ஆதித்தனாரின் நினைவு மக்கள் மனதை விட்டு நிச்சயம் அகன்று விடவே இல்லை. அகன்று விடவும் முடியாது. 

நல்ல தமிழர்:

தமிழர் தந்தை ஆதித்தனார் மறைந்தாலும் ‘நல்ல தமிழர்‘ என்பது எளிய மொழியில் எல்லாருக்கும் ஏற்ற வகையில் இருக்க வேண்டுமென கூறிச் சென்றிருப்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது நம் கடமையாகும்.