எல்லாருமே சசிகலா காலில் விழுந்தவர்கள்தான்:இப்போ என்னமோ யோக்கியர்கள் போல பேசுகிறார்கள்: விளாசும் அன்வர் ராஜா!!..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர்ராஜா அதிமுக தலைமை குறித்து தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

எல்லாருமே சசிகலா காலில் விழுந்தவர்கள்தான்:இப்போ என்னமோ யோக்கியர்கள் போல பேசுகிறார்கள்: விளாசும் அன்வர் ராஜா!!..

அ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அ.அன்வர்ராஜா இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என்று நேற்று இரவு ஈபிஎஸ்- ஓபிஎஸ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 கடந்த 24ஆம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திலேயே அன்வர் ராஜா பற்றிய விவாதம் நடந்தது. ஒரு தொலைபேசி உரையாடலில் எடப்பாடியை அன்வர் ராஜா ஒருமையில் பேசிய ஆடியோ வெளியானது. அதுகுறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரச்சினையைக் கிளப்ப இதற்கு அன்வர் ராஜா மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களில் பேட்டியில் அதிமுகவில் நடைபெற்று குழப்பங்கள் குறித்து வெளிபடையாக பேசி வருகிறார். அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒற்றுமை இல்லை. மனக் கசப்பு நீடிக்கிறது. அதனால்தான் அதிமுக தடுமாறுகிறது. பாஜக கூட்டணி வேண்டாம் என்பதுதான் கட்சியின் அனைவரது விருப்பமும். நான் சொன்னால் ஏதோ ஒரு கம்யூனிட்டி அடிப்படையில் பார்ப்பார்கள். ஆனால் அதிமுகவினரின் ஒட்டுமொத்த விருப்பமும் அதுதான். தேர்தலுக்கு முன்பே இதை சொல்லியாகிவிட்டது. ஆனால் தலைமை கேட்கவில்லை என அன்வர் ராஜா கூறினார்.


சசிகலாவை சின்னம்மா என்று முன்பிருந்தே அழைத்து வருகிறோம். எப்போதும் அவர் எனக்கு சின்னம்மாதான். திமுக தலைவரை நான் கலைஞர் என்றுதான் அழைப்பேன். அப்படித்தான் சின்னம்மா என்று அழைக்கிறேன். எல்லாரும் சின்னம்மா என்றுதானே சொன்னார்கள். அதிமுகவில் இருக்கும் அவ்வளவு பேரும் சின்னம்மா காலில் விழுந்தவர்கள்தானே. நான் அரசியல் நாகரிகத்தோடு இருக்கிறேன். அதனால் சின்னம்மா என்று அழைக்கிறேன். நான் அரசியல் நாகரிகத்தோடு இருப்பவன். ஜெயலலிதா இருந்தபோது கூட சசிகலாவை நான் சந்தித்ததில்லை. அதனால்தான் அமைச்சராக இருப்பேன், அமைச்சரவையில் இருந்து போய்விடுவேன். இதுவரை சசிகலா ஒருமுறை நான் பார்த்திருப்பேன். அவ்வளவுதான்.

இந்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரையும் ஏற்றுக் கொண்ட அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். சசிகலாவுடன் இருப்பவர்களையும் சேர்த்துக்கொண்டு அதிமுகவை வலிமையானதாக மாற்ற வேண்டும். 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியதில் இருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். இப்போது அதிமுக அவலமான நிலையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார் அன்வர் ராஜா. இந்தப் பேட்டிகளைத் தொடர்ந்தே அன்வர் ராஜா நேற்று நீக்கப்பட்டுள்ளார்.