அம்பேத்கர் - காந்தி - புனா ஒப்பந்தம் ஒருப் பார்வை

அம்பேத்கர் - காந்தி - புனா ஒப்பந்தம்  ஒருப் பார்வை
Published on
Updated on
4 min read

அம்பேத்கர் - காந்தி - புனா ஒப்பந்தம்

ஒருப் பார்வை

இந்திய சுதந்திரத்தின் உண்மை நிலை

வெள்ளையனே வெளியேறு, வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்..... இந்த கோஷங்களை எழுப்பியக் குரல்கள் யாருடையது?

ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்தக் குரல்களும், ஓங்கியக் கைகளும் சொந்த நாட்டின் சுதந்திரத்துக்கானவையா என்றால்? இல்லை, அது வெறும் பொய் புரட்டாகவே இருக்க முடியும்.

உண்மையில் பார்ப்பனர்களும், பிற உயர் சாதி இந்துக்களும், பிற்படுத்தப்பட்டப் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களின் மீது நடத்திய கலவரமே பின் நாளில் சுதந்திரப் போராட்டமாக வரலாற்றாசிரியர்களால் திரித்து சொல்லப்பட்டது என்பதை நம்புவது சிறிதுக் கடினம் தான்.

அம்பேத்கருக்கும் ஜின்னாவிற்குமான ஒற்றுமை

பார்ப்பனர்களும், உயர்சாதி இந்துக்களும் காந்தியின் ஆன்மீகத்தை ஆயுதமாகக் கொண்டுப் பல சதி செயல்களை செய்து ஏமாற்றி வருவதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டவர்கள் அம்பேத்கரும், ஜின்னாவும் தான். இரண்டு தலைவர்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இவ்விருவருமே உயர்சாதி இந்துக்களின் திட்டங்களை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர்.

நடந்துக் கொண்டிருப்பது அதிகாரக் கைமாற்றத்திற்கான செயல்பாடுகளே தவிர விடுதலைக்கானப் போராட்டமல்ல என்பதையும், ஆங்கிலேயர்களைத் துரத்தி விட்டுப் பார்ப்பனர்கள் ஆட்சி செய்ய திட்டமிடுகிறார்கள் என்பதையும் உணர்ந்தவர்களாய் இருந்தனர் ஜின்னாவும், அம்பேத்கரும்.

அரசியல் அதிகாரத்தை எந்தவித பாதகமுமின்றி அடையத் துடித்தப் பார்ப்பனர்களின் முகமூடிக் கிழியாமல் கவனமாய் இருந்த காந்தி இந்த அதிகாரக் கைமாற்றலுக்காக மக்களை திரட்டினார்.  இவர்களின் உண்மைத் தன்மையையறிந்த அம்பேத்கர் தனது மக்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இச்சூழலில் அமையவிருந்த சுதந்திர இந்தியாவில் தங்களுக்கான உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த ஜின்னாவும் அம்பேத்கரும் பார்ப்பனர்களால் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டதுக் காலத்தின் கொடுமையாகும்.

விலை மதிப்பற்ற அரசியல் ஆயுதம்

சுதந்திர இந்தியாவிற்கு முன் தொடங்கி  தேர்தலில் பட்டியல் இனத்தவர்களுக்காக இடங்களை ஒதுக்கும் முறை அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை என்கிறக் குற்றசாட்டைப் பட்டியலினத்தவர்களுக்கான இயக்கங்கள் தொடர்ந்து முன் வைத்து வருகிறது.

இரட்டை வாக்குரிமையின் படி பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் இரண்டு ஓட்டிற்கு சொந்தக்காரர். தன்  இனத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒரு ஓட்டும், பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஒரு ஓட்டும் போடலாம். இதை தான் "விலை மதிப்பற்ற அரசியல் ஆயுதமாக" அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

இரட்டை வாக்குரிமையை எதிர்த்த காந்தி

முதல் வட்டமேஜை மாநாட்டில் பட்டியலின மக்களுக்கான தனி தொகுதிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது, அம்மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. பின்னர், 1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள் என்று கூறினார்.

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸின் தலைவர் காந்தி, பட்டியலின மக்களுக்காக முன்வைக்கப்பட்ட தனி தொகுதிக் கோரிக்கைக்கு எதிராக சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று கடுமையாக எதிர்த்தார்.  இதனால் அம்பேத்கர் மற்றும் காந்திக்கு இடையே மோதல் வெடித்தது.

இதன் விளைவாக காங்கிரஸையும் காந்தியையும் இந்தியாவை சேர்ந்தப் பட்டியலின அமைப்புகள் நிராகரித்தது. பின்னர் அம்பேத்கரையும், இரட்டைமலை சீனிவாசனையும் தங்களது தலைவர்களாக ஏற்றுக் கொண்டு தீர்மானங்களை இயற்றியது. அந்நாளில் காந்திக்கு ஆதரவாக இருந்த பத்திரிக்கைகள் அம்பேத்கரை தேசத்துரோகியாக சித்தரித்து, சாதி இந்துக்கள் மனதில் அம்பேத்கருக்கு எதிரான வன்மத்தை தூண்டும்படி செய்திகளை வெளியிட்டன என்றுக் கூறப்படுகிறது.

சமூகநீதிக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்

வட்டமேஜை மாநாட்டை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய காந்தி கைது செய்ய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். 1932இல் பிரிட்டிஷ் அரசு வகுப்புத் தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து காந்தி அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஷே மெக்னால்டுக்கு கடிதம் எழுதினர். பின்னர் காந்தியின் கடிதத்தை நிராகரித்து பிரதமர் பதில் கடிதம் எழுதினார்.

உடனே தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக காந்தி அறிவித்திருந்த நிலையில் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். பட்டியலின மக்களின் தனி தொகுதிக்கு எதிராக மட்டும் காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. பட்டியலின மக்களுக்கென்று எந்த ஒரு தனி தொகுதியும்கொடுக்க கூடாது எனவும், அவர்கள் பொது தொகுதியில் இருந்து தான் போட்டியிட வேண்டும் என்பதற்கும் சேர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை காந்தி மேற்கொண்டார்.

மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால்....

காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிந்த அம்பேத்கர் அறிக்கையொன்றை வெளியிட்டார். என்னைப் பொருத்தவரையில் நான் எந்த யோசனையையும் பரிசீலிக்க தயாராக இருக்கிறேன் ஆனால் என் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எந்த வகையிலும் நான் அனுமதிக்க மாட்டேன்.

மகாத்மா அழிவே இல்லாத மனிதரல்ல, காங்கிரஸும் அப்படிதான். இந்தியாவில் பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள். "மகாத்மாக்கள் வந்தார்கள்... மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்" என்று தன் அறிக்கையில் அம்பேத்கர் கூறியிருந்தார்.

கட்டாயத்தினால் கையொப்பமிட்ட அம்பேத்கர்

காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், ஒட்டுமொத்த நாடும் காந்தியின் நலனுக்காக அம்பேத்கருக்கு அழுத்தம் கொடுத்த்து. பின்னர் அம்பேத்கர் வேறு வழிகளின்றி கட்டாயத்தின் பேரில் புனா ஒப்பந்தத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி கையெழுத்திட்டார்.

ஆனால் காந்தி அரசு அறிக்கை முழுவதையும் படித்துப் பார்த்த பின்பு தான் தனது உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்றுக் கூறினார். பிறகு அரசு அறிக்கையைப் படித்துப் பார்த்தப் பின்னரே செப்டம்பர் 26ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் காந்தி.

விடுதலைக்குப் பின்  35%

விடுதலைக்குப் பிறகுப் பட்டியலினத்தவர்களுக்கு தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டம் பட்டியலினத்தவர்களுக்கு புனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் பட்டியலினத்தவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் பட்டியல் இனத்தவர்களுக்கென்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% பட்டியல் சமூக மக்களின் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

மகாத்மாவின் அறப்போர் படுகொலை

காந்தியின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பட்டியலின மக்கள் மீது நடத்திய படுகொலையாகவேப் பார்க்கப்படுகிறது. தீவிர தீண்டாமை எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக்கொண்டவர் மக்களை கூறுப் போடும் நால்வருண வர்ணாசிரமத்தையும் தூக்கிப் பிடித்தார்.

அகிம்சை வழியை கடைபிடிக்க சொன்ன மகாத்மா காந்தி, ஒருவகையில் அந்த அகிம்சை முறையை அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் திமிறி எழாதவாறு ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தினார் என்பது வரலாற்று சோகம்.

------ அறிவுமதி அன்பரசன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com