அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.. 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி..!

கார்கேவுடன் போட்டியிட்ட சசி தரூர் 1,603 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்..!

அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.. 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி..!

ராகுல்காந்தி ராஜினாமா:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் அப்போதைய தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். மூத்த தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் தலைவர் பதவியை ஏற்பதாக இல்லை. 

காங். தேர்தல்:

அதன் பிறகு தற்காலிக தலைவராக மீண்டும் சோனியா காந்தி பதவி வகித்து வந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியானது. 

கார்கே-சசி நேரடி போட்டி:

இந்த தேர்தலில் காந்தி மற்றும் நேருவின் குடும்பத்தினர் யாருமே போட்டியிடவில்லை. சோனியா, ராகுல், ப்ரியங்கா என யாரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். 

சீனியர் நிர்வாகிகள் வாக்களிப்பு:

இருவரும் மாநிலம் மாநிலமாக சென்று தங்களது வாக்குகளை சேகரித்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 17-ம் தேதி காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சோனியா, ப்ரியங்கா, மூத்த தலைவர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர்.  

96% வாக்குப்பதிவு:

மொத்தம் 9,900 நிர்வாகிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். 96சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கார்கே வெற்றி:

அதன் படி, பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவரோடு போட்டியிட்ட எம்.பி., சசி தரூர் 1,603 வாக்குகள் பெற்று சசி தரூர் தோல்வியடைந்தார். 

ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்:

காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் நாடெங்கும் இசை வாத்தியங்களை இசைத்து பட்டாசு வெடித்து, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.