அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 11 ல் ஏற்பட்ட பிளவு:
சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் தனி தனி அணிகளாக பிரிந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையானது அணையாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது.
தனிநீதிபதி அமர்வு:
இதனிடையே, ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார்.
இரு அமர்வு நீதிபதி:
சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த இரு அமர்வு நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், தனிநீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி தொடர்ந்து வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பளித்த இரு அமர்வு நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து, ஈபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் கேள்வி:
அண்மையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் இருக்கும் போதும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அவசரம் காட்டப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷனா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. மேலும் இபிஎஸ் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கை ஒத்திவைத்தது.
இபிஎஸ் பதில் மனு:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, இபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமானது. அவர் அதிமுக பொதுக்குழு நடத்ததான் தடை கேட்டார். அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் கேட்கவில்லை. ஆகையால் ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்:
முன்னதாக, ஈபிஎஸ்சின் பதில் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அத்துடன் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் மாறி மாறி வந்துக்கொண்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் வட்டமடித்து வந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.