ராஜேந்திர பாலாஜி கைதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிவிட்டு திமுகவில் இருந்து விலகிய உறுப்பினர்!!...

அதிமுக முன்னாள்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதை கண்டித்து திமுகவிலிருந்து விலகுவதாக 15 ஆண்டு கால உறுப்பினர் ஒருவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் விருதுநகர் மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி கைதை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிவிட்டு திமுகவில் இருந்து விலகிய உறுப்பினர்!!...

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் 20 நாட்களாக வலைவீசி தேடிய நிலையில்,கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் விருதுநகருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ராஜேந்திர பாலாஜி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்படி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்ட ராஜேந்திர பாலாஜியை பாதுகாப்பு காரணம் கருதி அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட அடுத்த நாளே இவரது முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்குள் என்ன அவசரம் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதில் ஏன் இத்தனை தீவிரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு தெரியாமல் அவரது உதவியாளர்கள்தான் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக என்ற ஒரு தகவலும் ஒருபுறம் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாகவும் அவரது கைதை கண்டித்தும் திமுக பிரமுகர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு சிவகாசி அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற திமுக உறுப்பினர் கடிதம் எழுதியுள்ளார்.

நான் கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருந்து வருவதாகவும் எங்களது மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காமல் செய்தும், அவரை சிறையில் வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சிறையில் அடைத்து இருப்பது எங்கள் பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வேதனையாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது காலத்தில் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளதாகவும் பட்டாசு தொழிலாளர்களுக்கு, பட்டாசு தொழிலுக்கும் உறுதுணையாக இருந்தார். அவர் எங்கள் மண்ணின் மைந்தர். எனவே அவரின் கைது சம்பவம் எனது மனதை வேதனைப்படுத்திவிட்டது. எனவே, கட்சி நிர்வாகமும் ஆட்சி நிர்வாகமும் திருப்தி இல்லையென்பதால் நான் எனது உறுப்பினர் அட்டையை திருப்பி அளித்து  நமது கட்சியில் இருந்து விலகிகொள்கிறேன் என விநாயகமூர்த்தி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து திமுக உறுப்பினர் ஒருவரே அக்கட்சி தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டு விலகி இருப்பது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.