கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர் சினிமா பாணியில் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபல சமூக வலைதள செயலியான டிக் டாக், மக்களிடையே பரவலாக காணப்பட்டது. முதலில் பொழுது போக்கிற்காக வீடியோ செய்து வந்த பயனர்கள் நாளடைவில் அதில் உள்ள மோகத்தால் லைக்ஸ் அதிகம் வாங்க வேண்டும் என்று நினைத்து எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பலரின் உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்துவிட்டது. எனவே, அதிக உயிர்களை காவு வாங்கிய இந்த டிக் டாக் செயலியை Ban செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையடுத்து, மத்திய அரசு கடந்த 2020 ஜூன் மாதம் இந்தியாவில் தடை செய்தது.
டிக் டாக் தடைசெய்யப்பட்டதை தனக்கு சாதகமாக மாற்றிய பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், 2020 ஜூலை மாதம் டிக் டாக் போன்று ரீல்ஸ் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டது. இதனால் டிக் டாக் பயனர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே, இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கும் பயனர்களுக்கு கையில் இன்னொரு லட்டுவை கொடுத்தால் சும்மா விடுவார்களா? இங்கேயும் அவர்களின் அட்ராசிட்டியை காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதையும் படிக்க : செந்தில் பாலாஜி வழக்கு : இருதரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவு!
லைக்ஸ்க்காக என்னா வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதேசமயம் சமூக வலைதளங்களில் 'லைக்ஸ், களை குவிப்பதற்காக ரீல்ஸ் என்ற பெயரில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் நடுரோட்டில் ரொமான்ஸ் செய்வது, வாகனங்களை மறித்து சேட்டை செய்வது, பெண்கள் முன்னாடி வாகனங்களில் ரைட் செய்வது என எல்லை மீறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் கூட இளைஞர் ஒருவர், நடுரோட்டில் பேருந்தை மறித்து தனது ஒரு சக்கர வாகனத்தில் ஆக்சிலேட்டரை முறுக்கி, டயரை சுழல வைத்து, அதிக அளவில் புகையை வெளியேற்றி, அதன் பிறகு வாகனத்தில் செல்வது போல், ஒரு வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனபோதிலும், பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாலை வேளையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பேருந்துக்காக காத்திருந்த நேரத்தில், திடீரென வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சினிமாபாணியில் கையில் அணைத்து தூக்கியபடி அந்த பெண்ணிடம் கொஞ்சிக் கொண்டு சிறிது தூரம் நடந்தார். இது அங்கு நின்ற பொதுமக்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், இது போன்று பல்வேறு சேட்டைகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.