பெற்றோர்களே உஷார்..! மனைவியை கைவிடும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்!!

பெற்றோர்களே உஷார்..! மனைவியை கைவிடும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்!!

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் தங்கள் மனைவிகளை அடுத்தடுத்து கைவிடுவது அதிகரித்துக்கொண்டே வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுவாகவே பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் உள்ளூரில் இருக்கும் மாப்பிள்ளைகளை விட வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளைகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அதற்கு காரணம் வெளிநாட்டில் இருப்பவர்கள் கைநிறைய சம்பாதிப்பதாலும், அவர்கள் நன்றாக படித்தவர்கள் என்பதாலும், அதோடு அவர்கள் நம் பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலும் தான் திருமணம் செய்து கொடுக்கின்றனர். இந்த காரணங்களால் தான் இன்றளவும் அயல்நாட்டு மோகம் நம்முரில் குறைந்தபாடு இல்லை. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று வெளிநாட்டு மாப்பிள்ளையை தேடும் பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்றே சொல்லலாம். 

என்னன்னு பாக்குறீங்களா...கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 156 இந்திய பெண்கள் வெளிநாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டிருக்காங்களா...இப்ப கூட இந்த தகவல் கேரளாவைச் சேர்ந்த ஒரு  சமூக ஆர்வலர் மூலமாக தான் தற்போது வெளிவந்திருக்கிறது.

அவர் யாருன்னு கேக்குறீங்களா... கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்பவர் தான் இந்த கோவிந்தன் நம்பூதிரி. இவர் கேட்டு கொண்டதால் தான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 156 இந்திய பெண்கள் வெளிநாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டிருப்பதும், இது தொடர்பான வழக்குகள் இன்னமும் கோர்ட்டில் நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது.  

இந்த கணக்கெடுப்பில் அதிகபட்சமாக முதலில் இருக்கும் நாடு என்றால் அது  அமெரிக்கா தான். அங்கு கிட்டத்தட 615 வழக்குகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 586 வழக்குகளும், சிங்கப்பூரில் 237 வழக்குகளும்,  சவுதி அரேபியாவில் 119 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், குவைத்தில் 111 வழக்குகளும், இங்கிலாந்தில் 104 வழக்குகளும், ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகளும், கனடாவில் 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும், கணவனால் கைவிடப்பட்ட இந்திய மனைவிகளுக்கு இந்திய சமுதாய நல நிதி சார்பில் இந்திய தூதரங்கள் மூலம் 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி பணமும் சென்றடைய வில்லை என்பது இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இனிமேலும், இதுபோன்று பெண்களின் வாழ்க்கை பாதிக்காமல் இருப்பதற்கு, வெளிநாடுகளின் திருமண சட்டத்தின்படி வழக்குகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கான நடைமுறை தீர்வு கொண்டுவரப்பட வேண்டியது முக்கியம் என்பதால், இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இது குறித்தும் இனி அதிகம் பேசப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த அதிர்ச்சி தகவல்களுக்கு பிறகாவது நம்மூர் பெற்றோர்களிடம் உலா வரும் இந்த அயல் நாட்டு மோகம் குறையுமானு பார்ப்போம்.