மகளை வளர்க்க தந்தையாகவே மாறிய தாய் :  மனதை உருக வைக்கும் உண்மை சம்பவம் !!

மகளை வளர்க்க தந்தையாகவே மாறியிருக்கிறார் ஒரு தாய். மனதை உருக வைக்கும் உண்மை சம்பவம் குறித்த தொகுப்பு.

மகளை வளர்க்க தந்தையாகவே மாறிய தாய் :  மனதை உருக வைக்கும் உண்மை சம்பவம் !!

தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவாபிள்ளை. இவர் அருகில் உள்ள செக்காரகுடி, சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாளை 20வது வயதில் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15வது நாளில் சிவாபிள்ளை இறந்து விட்ட நிலையில், அங்கிருந்து எப்போதும் வென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன் பட்டியில் குடியேறியுள்ளார் மனைவி பேச்சியம்மாள்.

பின்னர், அங்கிருந்து சிறு, சிறு வேலைகளை பார்த்த அவருக்கு சில சில பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி, அப்பெண் குழந்தைக்கு தகப்பன் இல்லை என்ற கவலை இருக்க கூடாது எனவும், பேசியம்மாள் என்ற தாய் ஆணாக மாறி முத்துவாக மாற தொடங்கியுள்ளார். பின்னர், வறுமையின் காரணமாக பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்து வந்த முத்து தன்னை பெண்ணாக காட்டிகொள்ளாமல் ஆணாகவே வலம் வந்து வெளியூரில் அண்ணாச்சி என்ற பெயர் பெற்று வாழ்த்து வந்துள்ளார்.

அதன் பிறகு, தூத்துக்குடிக்கு வந்த முத்து, ஊர் மக்கள் கண்டுகொள்ளாத அளவில், வேட்டி, சட்டை உடுத்தி, கிராப் தலையுடன் ஆணாகவே காட்சியளிக்கிறார். 30 ஆண்டுகளாக இதே தோற்றம்தான். டீக்கடை, பரோட்டா கடை வரை வேலை பார்த்து வந்ததால் மாஸ்டர் என்றே அடையாளம் காணப்படும் முத்து மாஸ்டர் (பேச்சியம்மாள்). ஆம் இவரை ஊரினுள் மாஸ்டர் என்று தான் அழைக்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு மேலாக இவரின் பெண்ணிற்கு தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக  வாழ்ந்துவருகிறார். இப்போது முத்து மாஸ்டர்க்கு வயது 57. மகளுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்து, இப்போது பாட்டியாக வலம் வருகிறார். ஆனால் இது அவர் குடும்பத்திற்கு மட்டும் தெரிந்த உண்மை. ஊர் மக்களுக்கோ அவர் தாத்தா.

இது பற்றி முத்து மாஸ்டரிடம் கேட்கையில், அவர் கூறியது,  மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என 100 நாள் வேலை, பெயிண்ட் அடிப்பது போன்ற வேலைகளை செய்துவருவேன். திருமண வாழ்க்கை குழந்தை பிறந்த 15 நாட்களில் முடிந்தாலும், மகள் என்ற உறவுக்காகவும், தனது சுயமரியாதைக்காகவும் தோற்றத்தையே மாற்றிக்கொண்டேன். இதில் எனக்கு இன்றுவரை அதில் எந்த வருத்தமும் இல்லை.

கணவர் இறந்தபோது இறப்புச் சான்று வாங்காத நிலையில், ஆதார் அட்டையில் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்தால், தள்ளாத வயதில் உதவியாக இருக்கும் என்றார் முத்துமாஸ்டர் என்ற பேச்சியம்மாள்.

மகள் சண்முகசுந்தரி (36). கூறுகையில், நான் சிறுவயதில் தந்தையை இழந்ததால் எனக்கு அப்பா நியாபகம் வர கூடாது எனவும், சமூகத்தில் ஒரு பெண்ணாக இருந்து வேறு விதமான பிரச்சினைகளை சந்திக்காமல் இருப்பதற்காகவும், ஆணாக மாறி கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். அம்மா இப்படி ஆணாக மாறியதால் எனக்கு இன்றுவரை  எந்த வருத்தமும் இல்லை. ஆகவே முதியோர் ஓய்வூதியத்தொகை  வாங்கி கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறினார்.