ரஜினியை வைத்து நடக்கும் மெகா பிளான்? எந்த பாதையை தேர்ந்தெடுப்பார் ரஜினி

ரஜினியை வைத்து நடக்கும் மெகா பிளான்? எந்த பாதையை தேர்ந்தெடுப்பார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் கடந்த ஓராண்டுக்கு முன்பே முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்பது அவரது அறிக்கை மூலம் தெரியவந்தது.  கொரோனா பரவல் மற்றும் தனது உடல் நிலையை காரணம் காட்டு அரசியல் பிரவேசத்தை ஒத்திவைக்கதாக ரஜினி காந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தார். 1990களில் இருந்து 2021 வரை ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று இழுத்தடிக்கப்பட்ட கருத்திற்கு 2021ல் அவர் முடிவுரை எழுதி இருந்தார். இதனால், அவரது திரைப்படங்களின் விவரங்களும், தேசிய விருதுகள் பெறும் விவரங்கள் மட்டுமே செய்தியாக வந்து கொண்டிருந்தன. ஆனால், தற்போது, ரஜினி என்ற பிம்பத்தை சுற்றி மீண்டும் அரசியல் வளையம் சுற்றத் தொடங்கியுள்ளது.  

டெல்லி பயணம்:

கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அங்கு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார். ரஜினியின் டெல்லி பயணம் அரசியல் பயணமாக மாறுகிறதா? பாஜக தலைவர்களை ரஜினி காந்த் சந்தித்து பேசியுள்ளதால், அவரது அரசியல் பங்களிப்பு எப்படி சாத்தியமாகும் என்ற பேச்சுகள் எழுந்தன.  

இன்று ஆளுநர் சந்திப்பு:

டெல்லி பயணத்தை நிறைவு செய்த ரஜினி காந்த், சுடச் சுட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியையும் சந்தித்து பேசியதால், அரசியல் கட்சிகளின் முழு பார்வையும் ரஜினி காந்த் – ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பின் மீதே இருந்தது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை ரஜினி காந்த்தின் பயணங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. 

செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்:

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தவுடன், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ரஜினி, தமிழ்நாடு ஆளுநருடனான இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக நடந்தது என்று வழக்கமான பதிலையே கூறினார். இந்த சந்திப்பின்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசியல் ரீதியாக பேசினோம் என்று எதையும் மறைக்காமல் பதிலளித்தார் நடிகர் ரஜினி காந்த். உடனே, 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆளுநருடன் விவாதித்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வியை அடுக்கினர். அது குறித்து உங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறி அந்த கேள்வியையும் நடிகர் ரஜினி காந்த் கடந்து போனார். மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இல்லை இல்லை என்று கூறினார்.பால் தயிர் அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி குறித்து கேள்விக்கு, No Comments என்று கூறி முடித்துவிட்டார். ஆளுநர் ஆர்.என். ரவி உடனான சந்திப்பு, அரசியல் பயணம் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல், ஜி.எஸ்.டி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்காதது என ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு மெகா திட்டத்திற்கான நடைமுறை தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது. 

ரஜினி பதிலும் எழும் சந்தேகங்களும்:

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தன் உடல்நிலையை காரணம் காட்டி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று கூறியவர், தற்போது அரசியல் கட்சி தலைவர்களையும், ஆளுநரையும் சந்தித்து அரசியல் குறித்து பேசி வருவது ரஜினியின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி உள்ளது. 

ஒருவேளை நடிகர் ரஜினி மீண்டும் அரசியலில் வருவதற்கான ஒரு வியூகமாக இருக்குமா? அல்லது தனி கட்சி இல்லாமல் பாஜகவுடன் இணைவதற்கான ஒரு நோக்கமாக இருக்குமா? அல்லது பாஜக தரப்பில் இருந்து வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ரஜினிக்கு கொடுக்க கூடிய ஒரு அழுத்தமாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறதா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றது. மரியாதை நிமித்தமாக நடந்த ஒரு சந்திப்பு என்று கூறும் ரஜினிகாந்த்,  அரசியல் ரீதியாக பேசினோம் என்று கூறினார். அப்படி அரசியல் ரீதியாக பேசிய அவர், அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்.டி குறித்து கேட்ட போது No Comments என்று ஏன் கூறுகிறார் என்பதன் பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.