’தல’ வேண்டாத தலைக்கணம் அற்ற மனிதர்..30 வருடங்களை கடந்தும் தொடரும் சாதனைகள்..!

மெக்கானிக்காக பணியை தொடங்கி இன்று தன்னிகரற்ற நடிகராய் உயர்ந்திருக்கிறார் நடிகர் அஜித்குமார்..!

’தல’ வேண்டாத தலைக்கணம் அற்ற மனிதர்..30 வருடங்களை கடந்தும் தொடரும் சாதனைகள்..!

என் வாழ்க்கையில ஒரு ஒரு நாளும், ஒரு ஒரு நிமிஷமும் ஏன்? ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா.. அப்படி அவர் செதுக்கி இன்றோடு 30 வருஷம் ஆகிவிட்டது. யாரைப் பற்றி பேசுகிறேன் என்று அனைவராலும் கண்டுபிடித்திருக்க முடியும்.. அவரே தான்.. தல என்ற தலைகணம் வேண்டவே வேண்டாம் என்றவர்.. நான் நடிகன் மட்டுமல்ல.. இந்த உலகில் நான் யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இந்த வயதிலும் எனக்கு உள்ளது என உணர்ந்து நடிப்பையும் தாண்டி தனக்கான தனித்திறமையை உலகறியச் செய்து வருகிறார். அஜித்குமார்...

மெக்கானிக்கில் இருந்து ஹீரோ: இவரது வாழ்க்கை வரலாற்றை இன்றில் பலருக்கு மனப்பாட பகுதி என்றே சொல்லலாம். 1992 இல் ’பிரேம புத்தகம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமான இந்த அஜித்குமார், படிப்பை பாதியில் விட்டவர். மெக்கானிக்காக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களில் நடித்து மெது மெதுவாக ஹீரோவாக காலடி எடுத்து வைத்தவர். காலடி வைத்த இடங்கள் எல்லாமே கன்னி வெடிகளாய் தான் நகர்ந்தது. ஒரு புறம் நடிப்பு, மறுபுறம் கார், பைக் ரேஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து விடலாம் என நினைத்தவருக்கு மேடுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. 

இளம் பெண்களின் கண் பட்டதாலோ? இருப்பினும் படங்களில் நடித்த நேரம் போக, அல்லது படங்களிலேயே ரேஸிங் காட்சிகள் வைத்து, தனது ஆசையை நிறைவேற்றி வந்தார். அதன் விளைவு உடம்பில் பல இடங்களில் காயம், அறுவை சிகிச்சை தான். ஒரு படம் நன்றாக சென்றால் இரண்டு படம் வீழ்ச்சி என சென்று கொண்டிருந்தது. அமராவதியில் ஆரம்பித்து ஆசையில் ஆசை ஆசையாய் சினிமாவில் நுழைந்து வளர ஆரம்பித்தவர். காதல் கோட்டையில் இளம் பெண்களை கவர்த்த மன்னன், அத்தனை பேரின் கண் பட்டதாலோ என்னவோ, அடுத்தடுத்து சறுக்கல்... 

காதலியே மனைவியான தருணம்: காதல் கோட்டைக்கு பிறகு காதல் மன்னனாய் தோன்றி மீண்டும் தனது இருப்பை பதிய வைத்தவர். அடுத்த கட்டமாய் அவள் வருவாளா, அமர்க்களம் போன்ற படங்கள் மூலம் தனது திறமையையும் ரசிகர்களின் பட்டாளத்தையும் பெருக்கிக் கொண்டார். அத்தோடு அமர்க்களம் படத்தில் நடித்த போது, உடன் நடித்த ஷாலினி மீது காதல் கொண்டு அவரையே உற்ற துணையாகவும் ஏற்றுக்கொண்டார்.

 ’தல’ ஆக மாறிய அஜித்: ஒரே வருடம் இரண்டு ஜாக்பாட் அடித்தாற் போல, அமர்க்களம், வாலி படங்களால் ரசிகர்கள் மத்தியில் தானும் ஒரு முன்னணி நடிகன் தான் என பதிய வைக்க முயற்சிகளை மேற்கொண்டார். தான் மட்டுமே ஹீரோவாக இல்லாவிட்டாலும், மற்றொரு ஹீரோவோடு தனது ரோலை பங்கு போட்டுக்கொள்ளவும் தயாராக இருந்தார். அப்படி அவர் பங்கு போட்டுக்கொண்ட படங்களில் அவருக்கு தமிழக அரசு விருதை பெற்றுக் கொடுத்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். அதனை தொடர்ந்து தீனா படத்திலிருந்து இவரது பெயர் தல என மாறியது. 

சவாலான காலங்கள்: ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் அஜித்குமார். அதன்பின் வந்த சிட்டிசன் திரைப்படத்தின் மூலம் தன்னால் செண்டிமெண்ட்டாலும் மக்களை கட்டிப்போட முடியும் என நிரூபித்தார். மீண்டும் இரட்டை வேடங்களில் வில்லன் படத்தில் சமுதாய கருத்தை முன்னிருத்தி நடித்திருந்தார். அதன் பிறகு வந்த காலங்கள் தான் அஜித்தின் சவாலான காலங்கள் எனக் கூறலாம். ரெட், ராஜா, ஆஞ்சநேயா, ஜனா, ஜி, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார், போன்ற படங்கள் அஜித்தை மீண்டும் பின்னுக்குத் தள்ளியது. 

கேங்ஸ்டர் அவதாரம்: இனி இவரது மார்க்கெட் அவ்வளவு தான் என அனைவரும் அடுத்த ஹீரோவை நோக்கி நகரும் வேளையில், சும்மா கெத்தா, மாஸா, ஸ்டைலிஷாக வந்திரங்கினார் பில்லா படத்தில். அதன் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை மெல்ல உயரத்தை நோக்கி கொண்டு சென்றார். இடையிடையே அசல், ஏகன் போன்ற ஃபிளாப் படங்களை கொடுத்தாலும் கூட, வருடத்திற்கு ஒருமுறை என ஹிட் படங்களை கொடுக்கவும் தவறவில்லை. அதன் பிறகு அந்த டிரெண்டை மாற்றி வருடத்திற்கு ஒரு படம் தான் கொடுக்க வேண்டும் என்ற டிரெண்டை அஜித்குமாருக்கு உருவாக்கி கொடுத்த படம் மங்காத்தா

கமர்ஷியலில் கால்பதிப்பு: ஹீரோ எப்போதும் ஹீரோவாக மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன? வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவர் எங்களுக்கு ஹீரோ தான் என மங்காத்தாவின் அஜித்தை மீண்டும் கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். இத்தனை நாள் தாம் கொண்டிருந்த ஒரு டைம் லைனில் மாற்ற வேண்டிய கட்டாயத்தில், மங்காத்தா படத்திற்கு பிறகு முழுவதுமாக கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அஜித். 

அடுத்தக்கட்ட நகர்வு: ஆரம்பம், வீரம், வேதாளம், என்னை அறிந்தால், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்கள் மூலம் குடும்ப ஆடியன்ஸை இழுத்துக் கொண்டார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு செண்டிமெண்டை அடிப்படையாக கொண்டு அண்ணன், தம்பி, தாய், தங்கை, மனைவி என அனைத்து உறவுகளிடமும் தன்னை நெருக்கப்படுத்திக் கொண்டார். அதன் பின் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம், அஜித்குமாரை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று பின் தங்கினாலும், இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது. 

இளைஞர்களுக்கு ரோல்மாடல்: நடிப்பு மட்டுமின்றி தனது தனிப்பட்ட திறமையையும் வெளிப்படுத்த தவறவில்லை அஜித். ட்ரோன் தயாரிப்பது, ரேஸில் ஈடுபடுவது, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று பதக்க வேட்டையாடுவது என நடிகன் என்பதையும் தாண்டி தன்னை நிரூபித்திக் கொள்ள வயது தடையில்லை, முக்கியமும் இல்லை என்ற பாதையை வலுவாக அமைத்துக் கொண்டிருக்கிறார். பொது மேடை வேண்டாம், பொது பார்வை வேண்டாம், பொது தளங்கள் வேண்டாம் நானும் சாதாரண மனிதனைப் போலவே வாழ விரும்புகிறேன். என்னையும் அப்படியே பாருங்கள், அப்படியே நடத்துங்கள், தல என்ற தலைக்கணம் எனக்கு வேண்டவே வேண்டாம் என மற்ற முன்னணி நடிகர்களில் இருந்து மாறுபட்டு, தான் உண்டு, தனது வேலை உண்டு என தனது பணியினை செவ்வனே செய்து வரும் அஜித்குமார், ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட வேண்டும், அதில் வரும் புகழைக் கொண்டு சமூக வலைதளத்தில் ஹீரோவாக வலம் வர வேண்டும் என நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ரோல் மாடல் தான். 

30 வருடங்கள்: இன்றுடன் அவர் சினிமாவுக்குள் வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. வந்த போது எப்படி இருந்தாரோ, அதே போலத்தான் இன்றும் இருக்கிறார். பழகும் தன்மை மாறவில்லை. தனிப்பட்ட வாழ்க்கை மாறவில்லை. திறமை, உழைப்பு போன்றவற்றின் உயரம் மட்டும் தான் வளர்ந்து கொண்டு செல்கிறது. அஜித்குமார் அடுத்ததாக இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இன்னும் ஆண்டாடுக்கும் பணியில் அவர் சிறந்து விளங்க வேண்டும் என நாமும் பாராட்டுவோம்..