கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்...!

கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்...!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, கூட்டாட்சிக் கொள்கையின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கடந்த அட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி ஊழலில் ஈடுபட்டதற்கு தொடர்பான வழக்கில் மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 8 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய தினம் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திலும், கரூரில் அமைச்சருக்கு சொந்தமான இல்லத்திலும் முதலில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், அடுத்தபடியாக தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையானது நிறைவு பெற்ற நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், போலீசார் அவரை நள்ளிரவில் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜி கைது? நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி!

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமைச் செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, கூட்டாட்சிக் கொள்கையின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகது” என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய போது கூட, முழு ஒத்துழைப்பு தருவதாகவும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் உரிய விளக்கம் அளிக்கத் தயார் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவா அல்லது அதனைக் காட்டி மிரட்டவா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்து சென்ற நிலையில், உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்? இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது போன்றதாகும் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் நடத்திய சோதனையை சுட்டிகாட்டிய அவர், மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது என்று முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.