உலகளவில் மரண தண்டனைகள் எண்ணிக்கை 20% உயர்வு : அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் !!

2021-ம் ஆண்டில் உலகளவிலான மரண தண்டனைகளின் எண்ணிக்கை 20 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையான ஆம்னெஸ்டி கவலை தெரிவித்துள்ளது.

உலகளவில் மரண தண்டனைகள் எண்ணிக்கை 20% உயர்வு : அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் !!

முன்னேறிய நாகரீக உலகத்தில் மரண தண்டனை என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும் என்ற வாதமும் வலுவடைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டில் உலக அளவிலான மரண தண்டனைகள் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டு மரண தண்டனைக்கு உள்ளாகி 18 நாடுகளில் 579 பேர் கொல்லப்பட்டனர் என்றும் இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் என்றும் கூறியுள்ளது. அதேபோல் குறைந்த பட்சம் 2 ஆயிரத்து 52 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது 40 சதவீதம் அதிகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் அதிக மரண தண்டனைகளை நிறைவேற்றி ஈரான் முதலிடத்தில் உள்ளதாகவும் மொத்தம் 314 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இது 2017-ம் ஆண்டுக்குப் பின் பதிவாகியுள்ள மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது. குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காகவே 132 பேர் மரண தண்டனைக்கு ஆளாகி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மியான்மரில் ராணுவச் சட்டத்தின் கீழ் சுமார் 90 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அதில் பலர் தண்டனையை கேட்கக் கூட இல்லை என்றும் கூறியுள்ளது. சவுதி அரேபியாவும் 2020 முதல் மரணதண்டனைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் வங்கதேசம், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எகிப்து உள்ளிட்ட  56 நாடுகளில் குறைந்தது 2 ஆயிரத்து 52 மரண தண்டனைகளை நீதிபதிகள் வழங்கியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இதில் சீனா, வடகொரியா மற்றும் வியட்நாம் நாடுகளில் மரண தண்டனைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என்பதால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற முழுமையான   புள்ளி விபரங்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளது. வருடாந்திர உயர்வு இருந்த போதிலும், 2021-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த மரண தண்டனைகளின் எண்ணிக்கையானது  2010-க்குப் பின் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது.

தொற்று நோய் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அதே ஆண்டில் மரண தண்டனைகள் அதிகரித்திருப்பது மிகவும் கவலைக்குரிய அம்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்பு மரண தண்டனை விதிப்பதில் ஒரு உற்சாக மனோபாவம் காணப்படுவதாகவும் இது வாழ்வதற்கான அடிப்படை உரிமையை புறக்கணிக்கும் செயல் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்னும் மரண தண்டனையை நடைமுறையில் வைத்திருக்கும் நாடுகளை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது. அரசு அனுமதிக்கும் கொலைகள் இல்லாத உலகம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் அடையக் கூடிய ஒன்றுதான் என்றும் அதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை சூளுரைத்துள்ளது.