2 ஆண்டுகள் சிறை...மேல்முறையீடு செய்த ராகுல்காந்தி...ஜாமீனை நீட்டித்த சூரத் நீதிமன்றம்!

2 ஆண்டுகள் சிறை...மேல்முறையீடு செய்த ராகுல்காந்தி...ஜாமீனை நீட்டித்த சூரத் நீதிமன்றம்!

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்த சூரத் நீதிமன்றம், அவரின் மேல்முறையீட்டு வழக்கை மே 3ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.


எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவதாக நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். இந்நிலையில் மோடி சமூகத்தினரை ராகுல்காந்தி அவமதித்து பேசிவிட்டதாக கூறி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை 3 ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டிருந்த சூரத் நீதிமன்றம், திடீரென்று விசாரணைக்கு எடுத்து  ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ஜாமீனையும் சேர்த்து வழங்கி மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் காலஅவகாசத்தையும் அளித்தது. இதைத்தொடர்ந்து எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையும் படிக்க : 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து 11ம் நாளான இன்று சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இதையடுத்து ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை மே 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், ராகுல்காந்தியின் ஜாமீனை வரும் 13ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது. அப்போது, ராகுல்காந்தி நேரில் ஆஜராகத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.