183 ஆசிரியர்கள் பணிநீக்கம்...காரணம் என்ன?!!

183 ஆசிரியர்கள் பணிநீக்கம்...காரணம் என்ன?!!

திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக பெரும் விமர்சனத்தை அளித்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் எந்த அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதை எஸ்எஸ்சியின் நடவடிக்கை நிரூபித்துள்ளது.

ஊழல் தொடக்கமும் விசாரணையும்:

குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் நியமனம் மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் சந்தேகம் எழுந்தது.  இதனால் மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்,  நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐ தொடங்கியது.

இந்த ஊழலில் பணப் பரிமாற்றம் இருக்கலாம் என்பதால்  அமலாக்க துறையும் இந்த விசாரணையில் ஈடுபட்டது. இந்த ஊழல் நடந்தபோது சாட்டர்ஜி மாநில கல்வி அமைச்சராக இருந்ததால் அவரும் அவரை சார்ந்தவர்களும் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைதும் செய்யப்பட்டனர். 

தீர்ப்பையடுத்து:

வழக்கை விசாரணை செய்த கல்கத்தா உயர்நீதிமன்றம் 24 மணி நேரத்திற்குள் சட்டவிரோத நியமனம் பெற்ற 183 ஆசிரியர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட்டிருந்தது. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஆணையம் தனது இணையதளத்தில் பட்டியலை வெளியிட்டுள்ளது.  

பணி நீக்கம்:

மேற்கு வங்காள மாநிலத்தின் மத்திய பள்ளி சேவை ஆணையம், 183 ஆசிரியர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டு அவர்களின் நியமனம் சட்டவிரோதமானது என கூறியுள்ளது.  மேலும் இந்த ஆசிரியர்கள் 2016 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

விமர்சனங்கள்:

பாஜக விமர்சனம்:

பாஜக மாநில தலைவர் ராகுல் சின்ஹா ​​கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் எந்த அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதை எஸ்எஸ்சியின் நடவடிக்கை நிரூபித்துள்ளது எனவும் தற்போது பாடசாலைகளில் பணிபுரியும் தகுதியற்ற 183 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது அதை தெளிவாக நிரூபிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.  

மேலும் இந்த கொடூர குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

CPI (M) விமர்சனம்:

அதே நேரத்தில், CPI (M) தலைவர் சுஜன் சக்ரவர்த்தி கூறும் போது, SSC 183 வேட்பாளர்களை தவறாக நியமித்ததை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.  மேலும் சட்டவிரோத நியமனம் பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறியதோடு இது மிகப்பெரிய ஊழல் என்றும் தெரிவித்துள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்:

அதே நேரத்தில், டிஎம்சி செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், எஸ்எஸ்சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை நீக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.  அதை தொடர்ந்து இது நிர்வாக விவகாரம் என்றும், கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இந்தியாவுடன் ஒப்பீடு...வெறுங்கையுடன் திரும்பிய பாகிஸ்தான்...