"அரசு பள்ளி மூடப்படுகிறது என்றால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது" பொன். ராதாகிருஷ்ணன்!

"அரசு பள்ளி மூடப்படுகிறது என்றால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது" பொன். ராதாகிருஷ்ணன்!
Published on
Updated on
2 min read

தஞ்சையில் நடைபெற்ற விழாவில்," பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் என்பது அவர்களுக்கான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய கூட்டமாக தான் இருக்கும். மற்றபடி பெரிய அளவில் ஒன்றுமில்லை" என விமர்சித்துள்ளார், பொன். ராதாகிருஷ்ணன்.

தஞ்சை மாதாக்கோட்டை அடுத்துள்ள துலுக்கன்பட்டி கிராமத்தில் பாஜ.க. தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு சார்பில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி தினம், 9-வது ஆண்டு சாதனை விளக்க கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய செயற்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான, பொன் .ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ -மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

அதன் பின்னர் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் " ஒரு தலைவரைப் பற்றி கூறும்போது, அந்த தலைவர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் கடைபிடிக்கிறோமா என்பதுதான் முக்கியம். சிலை வைப்பதோ, கொண்டாடுவதோ, பெரிய விஷயமே கிடையாது. பொதுவாக எல்லா விஷயங்களுக்கும் சாதகங்கள் , பாதகங்கள் என்பது குறித்த வாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பொது சிவில் சட்டம் பற்றிய மசோதாவே வெளியாகாத முன்பு தவறு என்பது கூறுவது எந்த விதத்தில் நியாயம். தமிழகத்தில் கடந்த 1967 -ம் ஆண்டுக்குப் பிறகு காமராஜர் ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது. தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியினரே அவர்களின் தலைவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வ உ சி போன்றவர்கள் தங்களுக்கு இந்த பதவி வேண்டுமென இல்லாமல் வாழ்வை அர்ப்பணித்து சென்றவர்கள். அப்படியான நபர்களை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி அதுபோன்ற நிலை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். எனவேதான் தமிழர்கள் நாட்டை ஆளக்கூடியவர்கள் என பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்," என பேசியுள்ளார்.

மேலும், " தி.மு.க. மக்களுக்கு நன்மையான ஏதாவது ஒரு திட்டத்தை ஒன்றை வேண்டுமென்று கூறியுள்ளதா?எல்லாமே வேண்டாம் என தான் கூறி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என கூறினார்கள். சாதாரணமாக குடிசையில் வாழக்கூடியவர்களின் குழந்தைகள், மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் வாங்குகின்றனர். கற்பனை செய்து தான் பார்க்க முடியுமா? நீட் தேர்வு வராவிட்டால், ஏழை மாணவர்களுக்கு சீட் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. 16,000 பள்ளிகள் இருந்த நிலையில் அதை 32 ஆயிரம் பள்ளிகளாக மாற்றியவர் காமராஜர். 100 -க்கு 7 பேர் படித்த நிலையில் அதை 37 பேராக மாற்றியவர் காமராஜர். ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மூடப்படுகிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது. ஏழை மக்களின் எதிர்காலமும் மூடப்படுகிறது. காமராஜர் இலவச கல்வி கொண்டு வருவதற்கு முன்பு கட்டணம் செலுத்தி தான் படிக்கும் நிலை இருந்தது. மீண்டும் அந்த நிலைமைக்கு பெற்றோர்களை தள்ளி உள்ளது தி.மு.க. அரசு" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்," காங்கிரஸ் கட்சித் தமிழக தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழக முதல்வரை உடனடியாக அழைத்துக் கொண்டு, பெங்களூருக்கு சென்று மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்கிற நிலைப்பாட்டையும் சொல்லி, கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டாது என்பதையும் உறுதிப்படுத்தி வர வேண்டும் . பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் என்பது அவர்களுக்கான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய கூட்டமாக தான் இருக்கும். மற்றபடி பெரிய அளவில் ஒன்றுமில்லை" என கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com