ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போரிட்டு தலிபான் இராணுவத்தை வெல்ல முடியாததால் அந்த அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
வெளியேறிய அமெரிக்க படைகள்
கத்தார் நாட்டின் தலைநகரான டோகாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அமெரிக்கா படிப்படியாக தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தலிபான் படைகளின் தீவிர தாக்குதலால் நீடித்து நிலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
மசூதியில் குண்டு வெடிப்பு
ஏற்கனவே பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியிருந்த தலிபான் படைகள், அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 15, 2021 ஆம் நாள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் மதகுரு உள்பட 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 21க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.