உக்ரைன் துறைமுகங்களில் இருந்து பாதுகாப்பான தானிய ஏற்றுமதி.. ஐநா முன்னிலையில் ரஷ்யா - உக்ரைன் ஒப்பந்தம்

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து பாதுகாப்பான தானிய ஏற்றுமதி.. ஐநா முன்னிலையில் ரஷ்யா - உக்ரைன் ஒப்பந்தம்
Published on
Updated on
1 min read

உக்ரைன் துறைமுகங்களில் இருந்து பாதுகாப்பான தானிய ஏற்றுமதி செய்வது தொடர்பாக ஐநா முன்னிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

உணவுப் பொருள் தட்டுப்பாடு:

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரங்கள் அனைத்தும் ரஷ்ய முற்றுகையின் கீழ் உள்ளன. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உலகளாவிய உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தானிய ஏற்றுமதிக்கு ஒப்புதல்:

இதையடுத்து உக்ரைன் துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கும் தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய ஐநா முயற்சி மேற்கொண்டது. அதற்கு துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் உதவி செய்தார். ரஷ்ய, உக்ரைன் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முயற்சியாக பாதுகாப்பான தானிய ஏற்றுமதிக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

ஒப்பந்தத்தில் கையெழுத்து:

இதற்கான விழா துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் முன்னிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் உக்ரைன் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் குப்ரகோவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். துருக்கி அதிபரும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

வறுமை நாட்டு மக்கள் மகிழ்ச்சி:

ஒப்பந்தத்தை இரு நாடுகளும் முழுமையாகவும் முறையாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குட்டரெஸ் கேட்டுக் கொண்டார். உணவுப் பொருள் தட்டுப்பாட்டு விவகாரத்தில் 5 மாதங்களுக்குப் பின் சுமுக தீர்வு கிடைத்துள்ளது. வறுமை நாடுகளில் உள்ள மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com