ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கியதை அடுத்து ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடந்த சில வாரங்களாக டான்பாஸ் பகுதியில் உள்ள செவெரோடொனட்ஸ் நகரத்தை முற்றுகையிட்டிருந்த ரஷ்யா, கடந்த 2 தினங்களாக இடைவிடாத தாக்குதலைத் தொடங்கியது. இதனைத் தாக்குப் பிடிக்க முடியாத உக்ரைன் வீரர்கள் பின்வாங்கி நகரை விட்டு வெளியேறியனர். இதையடுத்து முக்கிய தொழில் நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷ்யாவின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
போர் தந்திரம் காரணமாகவே பின்வாங்கியுள்ளதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, விரைவில் இழந்த நகரங்களை மீட்போம் என்று கூறியுள்ளார். இதனிடையே உக்ரைன் மக்கள் கண்ணீருடன் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த மாதம் மரியுபோல் நகரை கைப்பற்றியதையடுத்து ரஷ்ய படைகளுக்கு கிடைத்த மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியாக செவெரோடொனட்ஸ்க் பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள லிசிசான்ஸ்க் நகரையும் கைப்பற்றி விட்டால் கிழக்கு உக்ரைன் முழுவதும் ரஷ்யா வசமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.