வடகொரியாவின் உளவு ஏவுகணை...அச்சப்படும் வல்லரசு நாடுகள்...காரணம் என்ன?!!

வடகொரியாவின் உளவு ஏவுகணை...அச்சப்படும் வல்லரசு நாடுகள்...காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

வடகொரியா ஆபத்தான திட்டங்களில் அதனுடைய வெற்றியை தொடர்ந்து பதித்து வருகிறது.  இந்த முறை உளவு ஏவுகணையின் கடைசி கட்ட சோதனையை செய்து அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை முறியடித்துள்ளது.

உளவு ஏவுகணை:

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் மீண்டும் அவரது ஆபத்தான திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதாவது, வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட உளவு செயற்கைக்கோளின் கடைசி கட்ட சோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.  இந்த சோதனை வெற்றியானது ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

நோக்கம்:

அண்டை நாடுகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதே இந்த உளவு ஏவுகணை சோதனையின் ஒரே நோக்கமாகும்.  அது மட்டுமின்றி, இந்த செயற்கைக்கோளை 2023 ஏப்ரலுக்குள் விண்ணில் செலுத்தி நிலைநிறுத்த வேண்டும் என்பதில் கிம் ஜாங் உறுதியாக உள்ளார். 

சிறப்பம்சங்கள்:

இந்த உளவு செயற்கைக்கோள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.  வட கொரியாவின் விண்வெளி நிறுவனமான NADA,  கேமரா இயக்க தொழில்நுட்பம், தகவல் தொடர்பு சாதனங்களின் தரவு செயலாக்கம், பரிமாற்ற திறன், கண்காணிப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இந்த உளவு செயற்கைகோளை உருவாக்கியுள்ளது.

ஏன் இத்தனை ஏவுகணைகள்?:

வடகொரியா இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.  பல நேரங்களில், பல ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.  கடந்த மாதம் வடகொரியா 20க்கும் மேற்பட்ட குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது.  அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் செயல்பாடுகளுக்கு விடையளிக்கும் வகையிலேயே இது போன்ற ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டதாக வட கொரியா பதிலளித்துள்ளது.

இது போன்ற உளவு ஏவுகணைகள் மூலமாக அனைத்து நாடுகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும் என பாதுகாப்புதுறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் அனைத்து நாடுகளும் அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com