ஈராக் மற்றும் சிரியா மீது துருக்கி தரைவழித் தாக்குதலை விரைவில் நடத்தக்கூடும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லின் நெரிசலான இஸ்திக்லால் அவென்யூவை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 81 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து துருக்கி அதிபர் அவருடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக துருக்கி வான்வழித் தாக்குதல்களை ஏற்கனவே நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் கலந்து கொண்டு கத்தாரில் இருந்து துருக்கி திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எர்டோகன், இந்த வான்வெளி தாக்குதலானது வெறும் அச்சுறுத்தலுக்காக மட்டுமே நடத்தப்படவில்லை எனக் கூறினார்.
மேலும் முன்பே கூறியது போல், நாட்டின், நிலத்தின் அமைதியை யாராவது சீர்குலைத்தால், அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும் எனவும் துருக்கியின் தென் பிராந்தியத்தில் பல தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தி அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகள் உள்ளன எனவும் துருக்கி அதிபர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தேவைப்பட்டால் சிரியா, ஈராக்கை தளமாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மீது தரைவழி தாக்குதல்களும் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.