காவல்துறையை கட்டுப்படுத்துகிறாரா கனிமொழி... ஆதாரம் காட்டும் சசிகலா புஷ்பா ?!

காவல்துறையை கட்டுப்படுத்துகிறாரா கனிமொழி... ஆதாரம் காட்டும் சசிகலா புஷ்பா ?!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்கும்  இடையே மோதல் போக்கு நிலவுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது .  இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம் பி யும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா கலந்துகொண்டு தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கடந்த 9 ஆண்டுகளில் பாரதப் பிரதமர் மோடி செய்த சாதனைகள்  குறித்தும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சியின் அராஜகத்தையும்,மோடியின் ஆட்சியின் சாதனைகளையும்  மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அமையும் வகையில் இந்த செயற் குழு கூட்டம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாரத பிரதமர்  ஜல்  ஜீவன் திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கயத்தார், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு  குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் ஆனால் கனிமொழி இது என்னவோ திமுக ஆட்சி கொண்டு வந்தது போல் அவர் திறந்து வைக்கிறார் என விமர்சனம் செய்தார்.

மேலும் முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அதிக அளவு கடனை  வழங்க நிதி ஒதுக்கி உள்ளார் எனவும் தமிழ் மொழியின் மீது மிகுந்த அக்கறையும் ஆர்வம் கொண்டு தமிழை வளர்க்க பெரும் ஆர்வம்  காட்டி வருகிறார் எனவும் ஸ்ரீவைகுண்டத்தில் பட்டப் பகலில் அரசு அதிகாரி வெட்டி படுகொலை செய்யபட்டது தான் திராவிட ஆட்சி மாடல் எனவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர் கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசு தான் திராவிட மாடல் அரசு எனவும் தூத்துக்குடியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது, இதனை தடுக்க காவல்துறை தவறிவிட்டது எனவும் குற்றஞ்சாட்டினார்.  மேலும் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த பிறகு காவல்துறை முழு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட முடியவில்லை எனவும் இவற்றை ஆதாரத்தோடு மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி என்பது தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் எம்மாதிரியான வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஏமாற்றியதோ அதே வாக்குறுதிகளை கர்நாடகாவில் காங்கிரஸ் கொடுத்து ஏமாற்றி உள்ளது எனவும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com