அரிசி ஏற்றுமதி: தடை விதித்த இந்தியா; தட்டுப்பாட்டில் அமெரிக்கா!

அரிசி ஏற்றுமதி: தடை விதித்த இந்தியா; தட்டுப்பாட்டில் அமெரிக்கா!
Published on
Updated on
2 min read

பாசுமதி அரிசி தவிர பிற ரகத்தை சேர்ந்த அரிசியினை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்ததால் உலகின் பல பகுதிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

உலகின் அரிசி தேவையில் 40 சதவீதத்தை இந்தியா நிறைவு செய்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் அரிசி ஈரான், சவூதி அரேபியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளின் 75 சதவீத அரிசி தேவையை இந்தியாவே பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் சாதகமற்ற சூழல் மற்றும் எதிர்பாராத வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அவலம் உருவாகியுள்ளது.

மற்றொரு புறம், கருங்கடல் தானிய ஒப்பந்த முடிவில் இருந்து ரஷ்யா பின்வாங்கியதால் உணவு பஞ்சம் நிலவும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. ரஷியா-உக்ரைன் போா் காரணமாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கருத்து தொிவிக்கையில், ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய சில நாட்களில் ஏற்பட்டுள்ள தானியங்களின் விலை உயர்வு, மில்லியன் கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும், இதனால் உயிாிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் இரஷ்யாவின் தானிய ஒப்பந்த விலகல் ஆகியவை உலகில் உள்ள பெரும்பாலான மக்களின் உணவு பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் அரிசி விலை கடந்த பத்தாண்டுகளில் எட்டாத உயர்வை எட்டியுள்ளது. அரிசி வாங்க சூப்பர் மார்க்கெட்டுகளில் போட்டிபோட்டு முண்டியடிக்கும் வீடியோக்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் தானிய ஒப்பந்த விலகலும் உலக அளவில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்படுகிறது.    

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com