கொரோனா பரவல் காரணமாக உலகமே முடங்கியிருந்த நிலையில், தென்கொரியா மட்டும் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.
தற்போது தென்கொரியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையிலும், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திட்டமிட்டபடி இந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 14 ஆயிரத்து 464 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை தொடங்கிய வாக்குப்பதிவில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.