அமெரிக்க அதிபருக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்க அதிபருக்கு சீனா எச்சரிக்கை!
Published on
Updated on
1 min read

தைவானுடன் அமெரிக்கா இராணுவ ஒத்துழைப்பைத் தொடர்ந்தால், சீனா தீர்க்கமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் மூலமாக பதிலளிக்கும் என்று அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு நேற்று தெரிவித்தார். ஜோ பிடன் நிர்வாகம் நாடாளுமன்றத்தில் 1.1 பில்லியன் டாலர் ஆயுத விற்பனைக்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த அறிக்கை வந்தது.

ஆயுத விற்பனை

தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனையானது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் எட்டப்பட்ட 'ஒரே சீனா' கொள்கை மற்றும் பிற இராஜதந்திர ஒப்பந்தங்களின் அப்பட்டமான மீறலை வெளிப்படுத்துகிறது. இத்தகைய ஒப்பந்தங்கள் பிரிவினைவாதிகளை தைரியப்படுத்துகின்றன மற்றும் தைவான் நீரிணையில் பதற்றங்களை அதிகரிக்கின்றன என சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 அமெரிக்க தரப்பு உடனடியாக தைவானுடனான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் மற்றும் தைவானுடனான இராணுவ தொடர்பை நிறுத்த வேண்டும், தைவான் நீரிணையில் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் காரணிகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும், என்று சீன தூதரக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.

 தீர்மானகரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

சீனா தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்க தீர்மானகரமான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று லியு கூறினார்.

ஊடக நிறுவனம் ஒன்றின் செய்தியின் அடிப்படையில், பிடென் நிர்வாகத்தால் தைவானுக்கான ஆயுத கொள்கலனில் 355 மில்லியன் டாலர் மதிப்புள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், அத்துடன் சுமார் $655.4 மில்லியன் மதிப்புள்ள கண்காணிப்பு ரேடார் உள்ளிட்டவை விற்பனை செய்ய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

தைவான்–சீனா இடையிலான முறுகல்

தைவான் நீரிணையில் பதற்றம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. சீனா பலமுறை எச்சரித்தும் அதை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் செய்தார். இந்த சர்ச்சைக்குரிய பயணம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை பின்னுக்குத் தள்ளியது மற்றும் அந்தப் பகுதியில் சீன இராணுவப் பயிற்சிகளை அதிகரித்தது.

சீனா தனது ஒரு பகுதியாகத் தான் தைவானை கருதுகிறது. மேலும்  தைவானுக்கு உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரிகளின் வருகைகளை அதன் இறையாண்மை மீதான தாக்குதல்களாகவே கருதுகிறது. கடந்த 1949 ஆம் ஆண்டு குவாமிங்டான் கட்சியினர் சீன கம்யூனிஸ்ட் படைகளிடம் போரில் தோல்வியடைந்த பின்னர் தைவானுக்கு தப்பியோடியதிலிருந்து இந்த இராணுவ பதற்றம் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com