Hizap ut tahir என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக சென்னை காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் பயங்கரவாத செயல் இருப்பதினால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி NIA வுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணி பிஸ்மில்லா நகர் 2-வது தெருவில் முகமது ரியாஸ் என்பவரது வீட்டில் ஆறு பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகாம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், பிஸ்மில்லா நகர் நான்காவது தெருவில் சையது அலி என்பவர் வீட்டிலும் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியில் வசித்து வரும் 62 வயதான முகமது அலி என்பவரது வாடகை வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கன்னியாகுமரி பகுதியில் செயல்படும் பள்ளி வாசலில் இமாம் ஆக உள்ளார். ஏற்கனவே காலை முதலே என்.ஐ.ஏ., அதிகாரிகள் இளங்கடை பகுதியில் இவரது வீட்டை தேடி வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பின்பு அவர் வசித்து வரும் வாடகை வீட்டை கண்டு பிடித்தனர்.