உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்ற திட்டம் உண்டு, சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டில்லியில் 1964 இல் உருவானது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பாக 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் வருகிற ஜூலை 21-23 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2024 இல் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு விருப்பம் காட்டிவருகிறது.
அதன்படி, 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு நிறைவடைந்தவுடன், 12 -ஆவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முடிவெடுக்கவுள்ளது.
மேலும், அடுத்த மாநாடு தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு உள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தகவல் அளித்துள்ளது.