உதயநிதி பேச்சு; "முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா?" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

உதயநிதி பேச்சு; "முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா?" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
Published on
Updated on
3 min read

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியிள் பேச்சு பற்றிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? என கேள்வி எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பெயர் வைத்ததை வரவேற்று பேசினார். மேலும் சிலவற்றை எதிர்க்க கூடாது ஒழிக்கத் தான் வேண்டும். அந்த வகையில் டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் எனப் பேசினார். 

இந்த பேச்சிற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி, உதயநிதி பேச்சிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி பேச்சை பற்றிய முழுவிவரம் தெரியாமலே பிரதமர் பேசலாமா? என கேள்வி எழுப்பி முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம - மனுவாத - சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர். அந்த மரபின் நீட்சியாக, சாதியின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை, பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து - சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான  வாதங்கள் இந்திய தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.
நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.

குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். 'நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்' என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார். பெண்களை இழிவுபடுத்தியும், அவர்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள்.

சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை 'சனாதனம்' என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார்.
இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆதரவு சக்திகள், 'சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி' என்று பொய்யைப் பரப்பினார்கள். இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது. 'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள்.
பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. முதலமைச்சர்கள் - உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச்செய்தியையே பரப்பி உதயநிதியைக் கண்டித்துள்ளார்கள்" எனக் கூறியுள்ளார். 

'நான் அப்படி பேசவில்லை' என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது தங்களது பேச்சுகளை ஒன்றிய அமைச்சர்கள் மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து, 'தலைக்கு 10 கோடி' என்று விலை வைத்திருப்பதும் - அதனை பா.ஜ.க. ஆதரவு சக்திகள் பரப்புவதும்தான் இவர்களது பாணியா? எனக் கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். 

'சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்' என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், ஒரு செய்தி வந்தால், அது உண்மையா - பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மணிப்பூர் பற்றியோ - சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் - ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை.
ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட – பட்டியலின – பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், அதனால்தான் நேற்று அண்ணல் அம்பேத்கரின் பேரன் திரு. பிரகாஷ் அம்பேத்கர் கூட, ”தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ளார். 

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணியானது பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, 'இந்தியா' கூட்டணி அல்ல என தெரிவித்துள்ள முதலமைச்சர், பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு. இதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.


மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களே, “சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புத் தீர்வுகள் இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். எனவே, இதற்கு மேலும் உதயநிதி பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினருக்கு விளக்கம் வேண்டும் என்றால், மோகன் பாகவத் அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் எனக் கூறியுள்ள முதலமைச்சர், அரசியலுக்காக மத உணர்வைக் கிளறி ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும் நாட்டின் மீது மாறாப் பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி, பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காக்கும் கடமையை மேலும் வேகப்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

திமுக கொள்கையை அறிவுப்பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்தக் காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம் என குறிப்பிட்ட முதலமைச்சர், அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும் என எச்சரித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com