புதுச்சேரியில் மீன்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தொடங்கியது.
மீன்பிடி தடை காலத்தையொட்டி ஆழ்கடலில் இருந்த அனைத்து விசைபடகுகளும், பைபர் படகுகளும் கரை திரும்பின. புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்தி குப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாமில் கடல் பகுதிகளிலும், பாரம்பரியமான மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்ட விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் நள்ளிரவு முதல் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் கடலுக்கு செல்லாததால் ஓய்வில் உள்ள மீனவர்கள் தங்களது விசைப்படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | விருதுநகர் மக்களே வெளியில் போகாதீங்க
மேலும் மீன்பிடி தடைகாலம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் அடுத்தடுத்த நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.