உட்கட்சி பதவிப் போட்டியால் தமிழ்நாடு சீரழிவை சந்தித்தது...முதலமைச்சர் குற்றச்சாட்டு!

உட்கட்சி பதவிப் போட்டியால் தமிழ்நாடு சீரழிவை சந்தித்தது...முதலமைச்சர் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் உட்கட்சி பதவிப் போட்டியால் தமிழ்நாடு சீரழிவை சந்தித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். 

திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். டெல்லி பாஜகவிடம் மாநில உரிமையை அதிமுகவினர் அடகு வைத்திருந்ததாக புகார் தெரிவித்த அவர், அதிமுகவினரின் உட்கட்சி பதவிப் போட்டியால் தமிழ்நாடு சீரழிந்து விட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திராவிடம் என்பது காலவதியான கொள்கை அல்ல என்பதால்தான், திராவிடத்தை பார்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி பயப்படுவதாக கூறினார்.

திமுகவின் 85 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், இரண்டு ஆண்டு ஆட்சியில் ஒரு கோடியை 50 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் தொடங்குவதில் மாநில அளவில் 16-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக குறிப்பிட்டார். மாநிலத்தின் தன்னிகரில்லா வளர்ச்சியை கண்டு ஒருசிலருக்கு வயிறு எரிவதாக குறிப்பிட்ட அவர், ஆளுநர் எதற்காக எதிர்க்கட்சிகாரர் போல் செயல்படுகிறார் என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை என்ற ஆளுநரின் பேட்டியை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர், பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதாகவும், ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததாக கூறினார். குழந்தை திருமணத்தை ஆளுநர் ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பிய முதலமைச்சர், ஆளுநர் தொடர்ந்து பொய் பேசி வருவதாக புகார் தெரிவித்தார்.

மாநிலத்தை ஆளும் அதிகாரம் முதலமைச்சரிடம் இருப்பதை மறந்துவிட்டு, தனக்குதான் சர்வாதிகாரம் உள்ளது என்ற நினைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com