சபாநாயகராக தனபால் இருந்தபோது அவரை கீழே தள்ளியவர்கள் தான் திமுகவினர் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னதாக எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக மாநாட்டின் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த மாவட்ட செயலாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேளும், மாநிலத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக என்பதில் பெருமை கொள்வதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். இளைஞர்கள், மகளிர் என அனைவரும் நிறைந்த ஒரே இயக்கம் அதிமுகதான் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் புது நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், திமுக ஆட்சியைச் சாடிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தையின் கை அகற்றப்பட்டது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
நிர்வாகத் திறமை இல்லாத திமுக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, குறுவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு தேவையான நீரை கொண்டு சேர்ப்பதில் திமுக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்த தெரிவிப்போம் என்று கூறிய அவர், கூட்டணி குறித்து பாஜகவிடம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பற்றி பேச திமுகவுக்கு அருகதையில்லை என்று சாடிய எடப்பாடி பழனிசாமி, சபாநாயகராக தனபால் இருந்தபோது அவரை கீழே தள்ளியவர்கள் தான் திமுகவினர் என்று விமர்சித்தார். மேலும், தற்போது படம் எடுத்துவிட்டு சமத்துவம் பேசினால் மட்டும் மக்கள் நம்பி விடுவார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க