"2வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு" காரணம் என்ன?

"2வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு" காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால்வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாக பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (30.05.2023) ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு மற்றும் பால் அடுக்கி கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் டப்புகள் பற்றாக்குறை காரணமாக அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் பால் பண்ணைகளில் இருந்து ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் என கூறப்பட்ட நிலையில் உண்மையான காரணம் பால் வரத்து முடங்கியது தான் என தெரிய வருகிறது.  

காலை 6.26மணி நிலவரப்படி இன்னும் 10க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள் பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாததால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்குள்ளேயே நிற்கின்றன. இதனால் குறித்த நேரத்திற்கு பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

இதன் காரணமாக மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50ஆயிரம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் தான் அமுல் நிறுவனம் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்து கொள்முதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக கூட ஆவினுக்கு வர வேண்டிய பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com