"அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிப்பது கடினம்" விஜயகாந்த் கண்டனம்!!

"அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிப்பது கடினம்" விஜயகாந்த் கண்டனம்!!
Published on
Updated on
2 min read

கலவர பூமியாக மாறியுள்ள நாங்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் சின்னத்துரை என்ற மாணவர் சக மாணவர்களால் கடந்த 9ஆம் தேதி இரவு அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார். சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது தங்கை சந்திர செல்வியும் தாக்கப்பட்டார். இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவரான விஜயகாந்த் அறிக்கை, வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அதுவும் பள்ளி மாணவர்களிடையே சாதிய வேறுபாடு அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மேலும் தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவன் சின்னதுரையையும் அவரது சகோதரியையும் தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நல்வழிப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "மாணவர்களை தூண்டிவிட்டு இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் இளைய சமுதாயத்தினர் இடையே சாதி வெறியை விதைத்து, அதன் மூலம் அரசியல் செய்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்," சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினார் பாரதியார். தற்போது எத்தனை பாரதியார், பெரியார் கருத்து சொன்னாலும், அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதி பிரச்சனை மாணவர்களிடமும் புகுந்து விட்டது என்பது எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும். எனவே, சாதி பிரச்சனைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாங்குநேரியில் சாதிய பிரிவினையால் தங்கையுடன் சேர்த்து 12ம் வகுப்பு மாணவனை மாணவர்கள் வெட்டிய பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள், முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், அவரது ஓட்டு வீட்டை அடித்து நொறுக்கி 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதனால் கலவர பூமியாக மாறியுள்ள நாங்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com