கடலூர் மாவட்டம் வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐந்தாவது நாளாக கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
என் எல் சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு நெய்வேலி சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி இரு நூறுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் என் எல் சி நிர்வாகம் விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டது. வளையமாதேவி கிராமத்தில் அறுவடைக்கு தாயாராகி வரும் வயல்களில் ராட்சத இயந்திரங்களை இறக்கி கால்வாய் தோண்டும் பணிகள் தொடங்கின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 28 ஆம் தேதி பாமக முற்றுகைப் போராட்டம் நடத்தியது. இதனால் அன்று ஒரு நாள் மட்டும் பணியை நிறுத்திய என் எல் சி நிறுவனம் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நேற்று முதல் நடைபெற்ற கால்வாய் அமைக்கும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அவர்களின் உதவியுடன் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது.