கொலையான முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரான சூசைப்பாண்டியாபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இறுதி மரியாதை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் என்பவரை மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள்ளையே வைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பந்தமாக மாரிமுத்து, ராமசுப்பு ஆகிய இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து உடற்கூறாய்வு முடிந்து பின்னர் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் சூசைபாண்டியாபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அதிகாரிகள் மரியாதை:
அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆடசியர் செந்தில்ராஜ் மற்றும் அதிமுக முன்னால் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ,எஸ்.பி.சண்முகநாதன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றனர்.
பாதுகாப்பு இல்லாத நிலை :
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், நேர்மையானவர்கள், துணிச்சலானவர்கள் அரசு பணியில் பணியாற்றுவது கேள்விகுறியாக உள்ளது எனவும் எனவே தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் 1கோடி ரூபாய் பணமும் அரசு வேலையும் கொடுத்திருந்தாலும் கூட உயிருக்கு ஈடாகாது எனவும் தெரிவித்தார்.
கட்டுப்படுத்த வேண்டும்:
மேலும் தமிழ்நாட்டில் கொலைகள், கவுர கொலைகள், மற்றும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது எனவும் இது தொடர்பாக தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பேசும்போது சுட்டிகாட்டி கூறியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூறினார். எனவே தமிழ்நாடு அரசு இது போன்ற செயல்பாடுகளை கட்டுபடுத்த வேண்டும் என்பது அதிமுக தரப்பு கோரிக்கை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
மனைவி கோரிக்கை:
உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மனைவி தனது கணவர் இறுதி ஊர்வலத்தின்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியது.
இதையும் படிக்க: முதலமைச்சரையே ஏமாற்றிய பலே வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்...!!