வேங்கை வயல்: "சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு கரும்புள்ளி" வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வேங்கை வயல்: "சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு கரும்புள்ளி" வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை வயல் போன்ற சம்பவங்கள் கரும்புள்ளி தான் என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மணிப்பூர் விவாகரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
மணிப்பூர் விவாகரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியதுடன்  மணிப்பூர் மாதிரியான பிராந்தியங்களில் அமைதியற்ற சூழலில் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும்  அன்றாட சண்டை வந்தால் கூட பெண்களை வைத்து பிரச்சனை செய்யும் மனப்பாங்கு சமூகத்தில் மாற  வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

அரசியலை தாண்டி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு அரணாக இருக்கும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு வெளியே வரும் எனவும் தெரிவித்தார். 

மேலும், மணிப்பூர் வீடியோ சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்க கூடாது என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், மணிப்பூருக்காக பேசும் காங்கிரஸ் கட்சி அக்கட்சி ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது என விமர்சித்தார்.

மேலும், கட்சி  வேறுபாடுயின்றி இந்தியாவில் எந்த பெண்ணிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பாஜக அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என சுட்டிக்காட்டிய அவர், வேங்கைவயல் விவகாரத்தில் ஏன் இன்னும் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியவில்லை என கேள்வி எழுப்பியதுடன் சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை வயல் போன்ற சம்பவங்கள் கரும்புள்ளி தான் எனவும் வானதி சீனிவாசன் சுட்டி காட்டினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com