நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்த வைகோ...!!

நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்த வைகோ...!!
Published on
Updated on
1 min read

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரசு உருவாக்கித் தந்த தொழிலாளர் தொழில் வாரியான அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்களைப் பாதுகாத்து, மாநில தொழிலாளர் சட்டங்களான தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலச் சட்டம், தமிழ்நாடு மீன் தொழிலாளர் நல சட்டம் ஆகியவைகளைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு நீண்ட காலமாக அறவழியில் போராடி வருகிறது என வைகோ கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியுள்ள அநீதிகளுக்கு எதிராகவும், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் கட்டட தேசிய தொழிலாளர் சங்கம் போராடிப் பெற்ற இரண்டு தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டதைக் கண்டித்தும் இந்தக் கூட்டமைப்பு போராடி வருகிறது எனவும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்து, கொண்டுவரப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்களையும் புறக்கணித்து, கலைஞர் அரசு நிறைவேற்றிய 36 நலவாரியங்களையும் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற இந்தக் கூட்டமைப்பின் வேண்டுகோளை மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து, திராவிட மாடல் ஆட்சியை மிகச் சிறப்புடன் நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தி.மு.கழக அரசு, தொழிலாளர் கூட்டமைப்பின் நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கேட்டுள்ளார் வைகோ.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com