காவிரி நீர் விவகாரம்: "கர்நாடக அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்காதது கண்டிக்கத்தக்கது" -டிடிவி தினகரன்!

காவிரி நீர் விவகாரம்: "கர்நாடக அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைக்காதது கண்டிக்கத்தக்கது" -டிடிவி தினகரன்!
Published on
Updated on
1 min read

எதிர்க்கட்சி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைக்காதது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுத் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், சொந்த மாநிலத்தின் நலனுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும், பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணை முதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது என சாடியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com