வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து புயலாக வலுப்பெற்றது. தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலைக்குள் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக தீவிரமடைய உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த புயலானது, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மகாபலிபுரத்தைச் சுற்றிலும், டிசம்பர் 9 - ஆம் தேதி நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்புகளை களைய தேசிய பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
--சுஜிதா ஜோதி