காட்டு யானைகளை கண்காணிக்க,.. கூடலூரில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு..!

காட்டு யானைகளை கண்காணிக்க,..  கூடலூரில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு..!
Published on
Updated on
1 min read

கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்ட வனத்துறையினர் மூலம் கட்டப்பட்ட கண்காணிப்பு உயர் கோபுரத்தினை கூடலூர் வன அலுவலர் ஓம்காரம் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அதிக அளவு வனப்பரப்பை கொண்ட பகுதியாக திகழ்வதால் இந்த வனப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமப் பகுதிகளின் அருகே உலா வந்து குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனிதர்களை தாக்கம் செயல்களில் ஈடுபடுவதால் மனித வன விலங்கு மோதல்கள் ஏற்படுகின்றன.

இதனால் கூடலூர், ஓவேலி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள பாடந்துறை மச்சிக்கொள்ளி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், அண்மைக்காலமாக இக்கிராம பகுதிகளில் காட்டு யானைகளில் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் வைத்த  கோரிக்கையின் அடிப்படையில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டவும், மனித வனவிலங்கு மோதல்களை தடுக்கவும் வனத்துறையினர் மற்றும் வேட்டை காவலர்கள் தங்கி கண்காணிப்பு பணிகளில் ஈடுபட பாடந்துறை மச்சிக்கொள்ளி பகுதியில் வனத்துறையினர் சார்பில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை கூடலூர் வன அலுவலர் கொம்பு ஓம்காரம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  பாடந்துறை வனச்சரகர் மற்றும் உதவி வன பாதுகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மச்சுக்கொல்லி பகுதியில் காட்டு யானைகளை விரட்ட கண்காணிப்பு கோபுரம் அமைத்த வனத்துறையினருக்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com