சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகளை வேட்டையாடியதாகக் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த ஆறு பேரை குண்டர் தரப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
தமிழ்நாடு வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
மேலும் படிக்க | திருச்சியில் திமுகவினர் இடையே மோதல் - கே. பாலகிருஷ்ணன்
அப்போது, சத்தியமங்கலத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புலிகள் வேட்டையில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க புலன்விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் வனவிலங்கு வேட்டை தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, 5 புலிகள் வேட்டையாடிய வழக்கில் கைதானவர்களை சாதாரண வழக்கில் கைதானவர்கள் போல கருதக்கூடாது என்றும், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும் எனவும் கூறி, வழக்கை ஏப்ரல் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.