சென்னையில் பேருந்துகள் தனியார் மயமாகிறதா...? அமைச்சர் அளித்த விளக்கம்...!

சென்னையில் பேருந்துகள் தனியார் மயமாகிறதா...? அமைச்சர் அளித்த விளக்கம்...!
Published on
Updated on
1 min read

பேருந்து தனியார் மயமாகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாகவும், Gross Cost Contract எனும் ஒப்பந்த முறையில் அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025 ஆம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இதனை கடுமையாக எதிர்த்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், இந்த முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். 


இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கப்போவதாக பதற்றம் பரவி வரும் நிலையில், குழு அமைத்து ஆராயவே டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல, பேருந்து தனியார் மயமாகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்ட அவர், ஏற்கனவே ஓடும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது என்றும், பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பது தேவையற்ற வதந்தி என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, உலக வங்கியின் கருத்துகள் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என கூறிய அவர், மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பாதிக்கப்படாது எனவும், அரசு பேருந்துகள் அரசு பேருந்துகளாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த வருடமும் புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com