காசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு அனுமதியளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்திர பிரதேசம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞான வாபி மசூதியும் காசி விஸ்வநாதர் கோயிலும் அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து அதை ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக சில இந்து அமைப்புகள் அவ்வப்போது கூறி வந்தன. தொடர்ந்து இது தொடர்பாக வாரணாசி நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன் படி ஆய்வுகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், அதில் நிறைவு அடையாத வாரணாசி நீதிமன்ற நீதிபதி இந்த ஆய்வு தொடர்பாக முழுமையான தொல்லியல் ஆய்வு நடத்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதிக்கு சென்றனர். அதே நேரத்தில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஞான வாபி மசூதி கமிட்டியினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 26ம் தேதி மாலை 5 மணி வரை மசூதியில் ஆய்வு நடத்த தடை விதித்தது, அதற்குள் மனுதாரர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அவகாசம் அளித்தது. இந்நிலையில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு அனுமதியளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் நீதியின் நலனுக்காக ஆய்வு முக்கியம் எனக்கூறி தொல்லியல் ஆய்வுக்கு அனுமதியளித்து இஸ்லாமியத் தரப்பு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.