தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாலை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலரிடம் எல்லா இடத்திலும் சாலை அப்படித்தான் இருக்கும் என ஆட்சியர் அலட்சியப்படுத்தி பேசிய சம்பவத்தால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் கார்பருவ சாகுபடி மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு கடனாநதி அணை மற்றும் இராமநதி அணைகளில் இருந்து 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கார்கால பருவ சாகுபடி பணிக்காக கடனா மற்றும் ராமநதி அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் நேற்று அணைப் பகுதிக்கு வருகை தந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கடையம் யூனியன் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் மாரிகுமார், கடையம் பகுதியில் இருந்து ராமநதி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் அதனை விரைந்து சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்க வந்துள்ளேன். இது குறித்து ஏதாவது இருந்தால் கூசங்கள் என்றதுடன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக தான் உள்ளது. இது குறித்து பேச வேண்டாம் என அப்பகுதி கவுன்சிலரை மக்கள் மத்தியில் கடுமையாக சாடினார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஆலங்குளத்தில் நடந்த விழாவில் ஆட்சியர் பேசும்போது இலவசமாக பஸ் இயக்குவதால் பல பஸ்கள் நிறுத்தப்பட்டதாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது சாலை வசதி குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் கேட்ட கேள்விக்கு மாவட்ட சாலைகள் மோசமாகத்தான் இருக்கிறது என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.