இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் ஒற்றை நோக்கில் திமுக செயல்பட்டு வருவதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
மதுரை புதுநத்தம் சாலையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடியில் 215 கோடி ரூபாயில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூலகத்தை திறந்து வைத்தாா்.
அதனை தொடா்ந்து ஆயுதப்படை மைதானத்தில் திறப்புவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சா் பங்கேற்று பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்களாக நான் சொல்வது கல்வியும், சுகாதாரமும் தான் எனவும், அதற்காகவே உயா் சிறப்பு மருத்துவமனையை சென்னையிலும், கலைஞர் பெயரில் நூலகத்தை மதுரையிலும் திறந்து வைத்துள்ளதாகவும் தொிவித்தாா்.
தொடா்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் திமுக அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அறிவு இயக்கமும் தான் என குறிப்பிட்டதோடு, கலைஞரே ஒரு நூலகம் தான் என புகழாரம் சூட்டினாா். மேலும் மற்ற மொழிகளை விட தமிழ் தனித்தன்மையுடன் விளங்குவதற்கு காரணம், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தான் முதலமைச்சா் குறிப்பிட்டாா். ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி எனவும், திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், கல்வியில் இந்தியாவிலே முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவா் தொிவித்தாா்.
இந்தியாவில் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் ஒற்றை நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சா், விழாவில் பங்கேற்ற மாணவா்களை பாா்த்து படிப்பு ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படுங்கள் என அறிவுறுத்தினார். மேலும், நாளைய எதிர்காலம் நீங்கள் தான் எனவும், புத்தகத்தில் உலகை படிப்போம், உலகையே புத்தகமாக படிப்போம் எனும் கலைஞாின் வாிகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.