ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு:
ஆவினில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விற்பனை விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், இந்த விலை ஏற்றத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்:
இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை மட்டும் உயர்த்தியது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தான் பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தி இருப்பதாக தெரிவித்தார்.
வணிக ரீதியாக வாங்குவதில் மட்டுமே உயர்வு:
மேலும், இந்த விலை உயர்வானது சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், இது முழுக்க முழுக்க ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டிற்கான விலையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதன்படி, கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாயாக விற்கப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த விலை உயர்வானது வணிக ரீதியாக வாங்கப்படுவதில் தான் 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.