திமுக கடைபிடிக்கும் சமூக நீதிக் கொள்கையே மாமன்னன் திரைப்படம் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டியளித்தார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின் படி, ரூபாய் 11 லட்சம் செலவில் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5200 மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, இன்று 521 மாணவ, மாணவிகள் அண்ணா நூலகம், பிர்லா கோலரங்கம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட இருந்தனர்.
இந்நிலையில் கல்வி சுற்றுலாவிற்கு செல்லும் மாணவ, மாணவிகளின் பேருந்துகளை, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ரிப்பன் மாளிகையில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், மேலும் தாமதமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததார்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்றும், தூர் வாரும் பணிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பட்ஜெட் அறிவிப்பின்படி முதற்கட்டமாக இன்று மாணவர்கள் சுற்றுலாப் பயணம் சென்றிருப்பதாகவும், மிகவும் சேதாரம் அடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் பள்ளிகளை சீரமைக்க 50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாமன்னன் திரைப்படம் குறித்து பேசிய மேயர் ப்ரியா, திமுக கடைபிடிக்கும் சமூக நீதிக் கொள்கையே மாமன்னன் திரைப்படம் என்றும், திமுகவில் இதுவரை ஏற்றத்தாழ்வை நான் எதிர்கொண்டதில்லை என்றும் கூறினார்.